புதுச்சேரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் அவமதிக்கப்பட்டதாக பரவிய தகவல் குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்று காலை சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் அவமதிப்புக்கு ஆளானதாக தகவல் ஒன்று பரவியது.
இது குறித்து விளக்கம் அளித்த அவர், “சிதம்பரம் நடராஜர் கோயிலில் என்னிடம் ஒரு தீட்சிதர் வந்து இந்த இடத்தில் உட்கார வேண்டாம் என்றார். மற்றொரு இடத்தைக் காட்டி அங்கே உட்காரக் கூறினார். நான் ஏற்கவில்லை. இறைவனை பார்க்க வந்துள்ளேன். இங்குதான் உட்காருவேன் என்றேன். அவர் போய் விட்டார். அதை நான் பெரிதாக நினைக்கவில்லை.
மற்ற தீட்சிதர்கள் இறைவன் பிரசாதத்தை தந்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினையாகவே உள்ளது. தீட்ச்சதர்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மக்களுடைய பிரச்சினையும் சிவன்தான் தீர்க்க வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.