தேங்காய் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த விவசாயி ஒருவர், தனது 2 ஏக்கரில் இருந்த 143 தென்னை மரங்களை வெட்டி அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழதிருப்பூந்துருந்தி பகுதியைச் சேர்ந்தவர் என்.ராமலிங்கம்(57). இவர் கண்டியூரில் உள்ள தனக்குச் சொந்தமான 2 ஏக்கரில் தென்னந்தோப்பு வைத்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் வேதனையடைந்த அவர், தனது தோப்பில் இருந்த 143 தென்னை மரங்களையும் வெட்டி அழிக்கும்பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், அங்கு மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து என்.ராமலிங்கம் மேலும் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது விவசாயிகளிடமிருந்து தேங்காயை வெறும் ரூ.5-க்குத்தான் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு மரத்தில் தேங்காய் பறிக்க ஆள் கூலி குறைந்தது ரூ.40-ம், வெட்டிய தேங்காயை அள்ள அரைநாள் சம்பளமாக ரூ.300-ம் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், பராமரிப்புச் செலவும் அதிகமாக உள்ளது.
இதனால் தென்னை சாகுபடியில் நஷ்டம் ஏற்படுகிறது. இனி இதனால் பலன் இல்லை என்பதால், இவற்றை வெட்டி அழித்துவிட்டு வாழை, கத்தரி, கீரை போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த மரங்கள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டவை. குழந்தைகளை போல வளர்த்த தென்னை மரங்களை வெட்டி, அவற்றை மரக்கடைக்கு அனுப்புவது வேதனையாக இருக்கிறது. ஒரு மரம் ரூ.1,500 என விலை வைத்து வியாபாரியிடம் விற்றுவிட்டேன். 2 நாட்களாக மரங்கள் வெட்டப்படுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் மரங்கள் அனைத்தும் வெட்டப்படும் என்றார்.