ஐதராபாத்: உதய்பூர் தையல்கார் கன்னையா லால் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவனை ஐதராபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த ஜூன் 28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் என்பவர், அதே ஊரைச் சேர்ந்த ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் இருவரும் தாங்கள் கன்னையா லாலை கொன்ற விபரத்தை படம்பிடித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டனர்.மேலும் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மற்றொரு வீடியோவை வெளியிட்டனர்; அதில் அவர்கள் கொலை சம்பவத்தை பெருமையாகவும், பிரதமர் மோடியை குறிவைத்து மிரட்டல் விடுத்தனர். அதே நாளில் குற்றவாளிகள் இருவரும் போலீசாரல் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில், மேற்கொண்ட கொலையாளிகளுடன் ெதாடர்புடைய பீகாரைச் சேர்ந்த ஒருவனை அதிகாரிகள் தேடிவந்தனர். இந்நிலையில், ஐதராபாத் அடுத்த சந்தோஷ் நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த அந்த மர்ம நபரை என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். விசாரணைக்காக அவனை மாதப்பூரில் உள்ள என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.