பாடசாலை மாணவர் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை அவர்கள் எதிர்பார்க்கும் உலகை சென்றடைய பொருத்தமான வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
“நாடு மிகவும் மோசமான முறையில் நெருக்கடி நிலையை நோக்கி நகர்ந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
தற்போதைய நிலைமை மேலும் மோசமடைந்தால் நாடு எந்த திசையில் பயணிக்கும் என்பது நிச்சயமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு இராஜதந்திர சேவைகள் நாட்டுக்கான பொறுப்பை நிறைவேற்றவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அந்தப் பதவிகளை நியமிக்கும் போது, நட்பு, உறவினர் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டதாகவும், தனியாக நடக்கக் கூட முடியாதவர்கள் எப்படி அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது என்றார்.
ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாடு அழிந்துவிடும்
இதன் போது குறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாடு அழிந்துவிடும் என்றார்.
கடந்த 3 வருட காலப்பகுதியில் ஏனைய மக்களின் கருத்துக்களைப் பொருட்படுத்தாமல் இந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் தாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என எண்ணியமையினால் நாடு பெரும் பாதாளத்தில் வீழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் என்றார். சர்வாதிகாரம் இல்லாமல் அனைவரின் கருத்துகளையும் கேட்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்றார்.
முற்போக்குக் கட்சிகளின் ஆலோசனைகள், யோசனைகள் கேட்கப்படும் என்றார்.
இருதரப்பு கருத்துக்களையும் ஒன்றிணைக்கும் பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சிகளின் இலக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நிகழ்ச்சி நிரலின் மூலம் நாட்டு மக்களின் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியும் என்றார்.