அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் தலையிட முடியாது என்றுகூறி ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜூன் 23-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் `பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’ எனக்கோரி ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதைத்தொடர்ந்து ஜூன் 22ல் விடிய விடிய நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டது.
அதன்முடிவில் `ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த புதிய தீர்மானம் நிறைவேற்றக் கூடாது’ என உத்தரவிட்டு பொதுக்குழுவை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து நடந்த அந்த பொதுக்குழு கூட்டத்தில், முக்கியமான தீர்மானமான `ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வர இயலாத சூழல்’ ஏற்பட்டதை அடுத்து 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக பொதுக்குழு முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் 3வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று விசாரணைக்கு வந்தது வழக்கு.
அப்போது, வரும் 11-ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறி ஈபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதற்கிடைப்பட்ட வேளையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ்க்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு விசாரணையின்போது, `இரட்டைத் தலைமை முறையை தூக்கி எறிந்துவிட்டு கட்சியை ஈபிஎஸ் கைப்பற்ற நினைக்கிறார்’ என ஓபிஎஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கு, `இது உட்கட்சி விவகாரம். அதில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு `கட்சியின் விதிகள் மீறப்படும்போது நீதிமன்றம் தலையிடலாம்’ என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கூறியபோது, `நட்போ-கருத்து வேறுபாடோ நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்’ என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் `உட்கட்சி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் ஒரு எல்லைவரை மட்டுமே தலையிட முடியும்’ என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு தடைவிதிக்குமாறும் ஈபிஎஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும், 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கும் இடைக்காலத்தடை விதித்தனர். அதேநேரத்தில் ஜூலை 11 பொதுக்குழு விவகாரத்தில் தாங்கள் தலையிட முடியாது என்றும் அதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் தரப்பு அணுகலாம் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM