உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த டி.ராஜேந்தர், சிகிச்சைக்குப்பின் பூரண நலமடைந்திருக்கிறார். சமீபத்தில் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் டி.ராஜேந்தர்.
அங்கே அவரைப் பரிசோதித்ததில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் வெளிநாட்டுக்கு அவரை அழைத்துச் செல்ல வேண்டியிருந்ததால், தன் படப்பிடிப்பு வேலைகளையும் தள்ளிவைத்துவிட்டு அமெரிக்காவில் 12 நாள்கள் தங்கியிருந்து அதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துவந்தார் சிம்பு.
இதனிடையே அமெரிக்கா செல்லும் முன்பு டி.ராஜேந்தர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களையும் சந்தித்துப் பேசினார்.
”நான் வெளிநாடு போகக்காரணமே, என் மகன் சிலம்பரசன்தான். ’அப்பா உங்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க வெளிநாட்டுக்கு நான் அழைச்சிட்டுப் போவேன்னு’ ஒத்தைக்கால்ல நின்னதாலதான், என் மகனுக்காகத்தான் நான் வெளிநாடே போறேன்” எனப் பெருமிதமாகச் சொன்னார். அமெரிக்காவில் டி.ஆருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. குடும்பத்தினருடன் அங்கே தங்கியிருந்து அப்பாவையும் கவனித்து வந்தார் சிம்பு. இப்போது உயர் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் முழுமையாக குணமடைந்துள்ளார் டி.ஆர்.
அங்கே ஒரு மாத காலம் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அங்கேயே தங்கலாம் எனக் குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதுவரையிலும் அப்பாவை உடனிருந்து, அனைத்துப் பணிகளையும் முன்னின்று கவனித்துக்கொண்ட சிம்பு, அப்பா மேலும் ஒரு மாத காலம் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் ஏற்படுத்திவிட்டு, சென்னை திரும்புகிறார். அனேகமாக, இந்த வாரமே ‘பத்து தல’ படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.