பா.ஜ.கவின் மூத்த தலைவரான ரூபா கங்குலி மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான குணால் ஜோஸை சந்தித்துள்ளார். இது மேற்குவங்க அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பல்வேறு விவகாரங்களில் மாநிலத் தலைமையால் விமர்சிக்கப்பட்டு வரும் பா.ஜ.க மூத்த தலைவரான ரூபா கங்குலி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார். இது மேற்கு வங்க அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ரூபா கங்குலி மற்றும் கோஷ் இருவரும் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், அதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளனர். மேலும் ‘நாங்கள் ஒரு கூட்டத்தில் சந்தித்தோம். நாங்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஆனால் அவர் எனக்கு மூத்த சகோதரி போன்றவர். எங்கள் டீன் ஏஜ் நாள்களில், அவர் மகாபாரதம் மெகா சீரியலில் திரௌபதியாக நடித்த ஒரு பிரபலமான நடிகை. எங்களின் மரியாதை நிமித்தமான சந்திப்பில் யாரும் அரசியல் ரீதியாக எதையும் முயற்சிக்க வேண்டாம்’ என்று கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
பின்னர், ஒரு செய்தியாளர்களிடம் பேசிய ரூபா கங்குலி, ’நாங்கள் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தோம். ஆனால் வேறொரு கட்சியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசுவது அந்தக் கட்சிக்கு மாறுவது என்று ஆகாது’ என்று கூறியுள்ளார்.
‘மகாபாரத’ திரௌபதி முதல் தீவிர அரசியல் வரை… ரூபாவின் பயணம்!
மேற்குவங்கத்தை சேர்ந்த ரூபா கங்குலி, தனது கல்லூரி படிப்பை முடித்த பின் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். புகழ்பெற்ற மகாபாரத சீரியலில் திரௌபதி காதாபாத்திரத்தில் நடித்து, பெரும் புகழடைந்திருந்தார். தொடர்ந்து 2015ல் பா.ஜ.கவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் மாநிலப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2016ல், அவர் மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் மேற்கு வங்கத்தில் இருந்து 2019 மக்களவை மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தீவிரமாக பங்கேற்றார். தொடர்ந்து ராஜ்யசபாவில் நியமன எம்.பியாக பதவி வகித்தார். தற்போது, இவர் திருணாமுல் காங்கிரஸில் இணையவிருப்பதாக மேற்குவங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.