டெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் தொடர்ந்து 2 நாட்களாக பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சம்பவங்களில் சிக்கியதை அடுத்து விளக்கம் அளிக்க கோரி விமான போக்குவரத்து இயக்குனரகம் நோட்டீஸ் அளித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் பயணிகள் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் 7வது முறையாக சிக்கியுள்ளது. அதிலும் நேற்றும், இன்றும் அடுத்தடுத்து நடுவானில் கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று கொல்கத்தாவில் இருந்து சீனாவுக்கு புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் சரக்கு விமானத்தில் வானிலை ரேடார் கருவி வேலை செய்யாதது நடுவானில் கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் மீண்டும் கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டது. இதேபோல் டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் நிரப்பும் இண்டிகேட்டர் வேலை செய்யாததால் அவசர அவசரமாக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பில் அஜாக்கரதையாக நடந்ததை அடுத்து பாதுகாப்பான விமான நிறுவனமாக, நம்பகத்தன்மையான நிறுவனமாக நடந்துகொள்ள தவறிவிட்டிர்கள் என சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பயணிகள் பாதுகாப்பே முதன்மையானது என்றும் ஒன்றிய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.