சென்னை
கடந்த சில நாட்களாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையே தூரம் அதிகமாவதால் குளிர் அதிகரிக்கும் எனவும் இதனால் உடல் வலி, காய்ச்சல், சுவாசக் கோளாறு போன்ற உடல் உபாதைகளும் ஏற்படும் எனவும் தகவல்கள் பரவுகின்றன.
இது முற்றிலும் பொய் என அறிவியல் பலகை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்துப் அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு வருடமும் பூமி நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகையில் ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிக அருகிலும், மற்றொரு காலகட்டத்தில் சூரியனிலிருந்து தூரமாகவும் செல்லும்.
சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் அதனுடைய வட்டப்பாதையில் எப்போது சூரியனிடமிருந்து தூரமாக இருக்கிறதோ அந்நிகழ்வுக்குப் பெயர் அப்ஹீலியன். எந்த நேரத்தில் மிக அருகில் இருக்கிறதோ அதற்குப் பெயர் பெரிஹீலியன். கிரேக்க மொழியில் ‘அபோ’ என்றால் தூரம். ‘பெரி’ என்றால் அருகாமை.
அதே போல் பூமி அதனுடைய சுற்றுப்பாதையில் சூரியனிடமிருந்து மிக அதிகமான தூரத்தில் இருக்கும்போது அதை அப்ஹீலியன் என அறிவியலாளர்கள் அழைக்கின்றனர்.
பொதுவாக இந்த அப்ஹீலியன் நிகழ்வு ஜூலை மாதத்தில் நடக்கும். இந்த காலகட்டத்தில் சூரியனிடமிருந்து பூமி கிட்டத்தட்ட 152மில்லியன் (15.2 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்.
அதே போல் பூமி சூரியனுக்கு மிக அருகாமையில் அதாவது 147மில்லியன்(14.7 கோடி) கிமீ தூரத்தில் இருக்கும்போது அதற்குப் பெயர் பெரிஹீலியன். இது ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழும். பூமியின் சுற்றுப்பாதை வட்டமாக இல்லாமல் கோழி முட்டைப் போல் நீள்வட்ட வடிவில் இருப்பதனால் இது ஏற்படுகிறது. இந்த இரண்டு நிகழ்வுகளின்போதும் பூமியின் தட்ப வெட்ப நிலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது என ஸ்ரீகுமார் தெரிவித்தார்.
அப்ஹீலியனின் போது சூரியன் பூமியிலிருந்து தூரமாகச் செல்வதால் குளிர் அதிகமாகும் என யாரோ சிந்தித்து, அதனால் காய்ச்சல், குளிர் ஏற்படும் என அவர்களே யூகித்து போலிச் செய்தியை வாட்ஸ் ஆப் மூலமாகப் பரப்பி வருகிறார்கள். அதுவும் அப்ஹீலியனை ‘அலிபென்’ என்ற தவறான பெயரில் மெசெஜ்கள் ஃபார்வர்ட் செய்யப்படுகின்றன இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.
உண்மையான அறிவியலைத்தான் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டுமேத் தவிர, இது போன்ற போலிச் செய்திகளை பார்வார்ட் செய்வது தவறு எனவும் அவர் தெரிவித்தார்.