சென்னை: பூஸ்டர் தடுப்பூசிக்கான கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அதன்படி 2-வது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த கால இடைவெளியை 6 மாதங்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தடுப்பூசிகளுக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழு பரிந்துரையின்படி பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால அவகாசம் 9 மாதங்களில் இருந்து 6 மாதங்கள் குறைக்கப்படுகிறது.
எனவே, 6 மாதங்கள் நிறைவடைந்த 18 முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் தனியார் மையங்களிலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அரசு மையங்களிலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.