அ.தி.மு.க-வில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில், நடைபெற்ற பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் வெளிநடப்பில் முடிந்தது. ஆனாலும், ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழுவைக் கூட்டி, ஒற்றைத் தலைமையை ஏற்க எடப்பாடி பழனிசாமி கங்கணம் கட்டிக் கொண்டு மும்மரமாக பணிகளை மேற்கொள்கிறார்.
அதற்காக, 16 தீர்மானங்கள் தயாராகி இருக்கிறது. ஏற்கனவே நடந்த பொதுக்குழுவுக்காகப் பல ஸ்வீட் பாக்ஸ்களை இறக்கிய எடப்பாடி இந்த முறை பொதுக்குழு தனக்குச் சாதமாக அமைக்கப் போராடி வருகிறார். அதேநேரத்தில், பொதுக்குழுவை நிறுத்த பன்னீர்செல்வம் தரப்பு சட்டத்தை நாடி, பல பணிகளைச் செய்துவருகிறது.
இதனைச் சரிசெய்தாலும், ஒருவேளை கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பதை காரணம் காட்டி பொதுக்குழு நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆன்லைன்யிலாவது பொதுக்குழு-வை நடத்த எடப்பாடி தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்காக உறுப்பினர்களுக்குப் பயிற்சியில் அதிவேகத்தில் நடக்கிறது.
கடந்த சில நாள்களாகத் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்துள்ளது. இதைக் காட்டி, ஒருவேளை பொதுக்குழுவை முடிக்க அரசு முன்வரலாம் என்று எடப்பாடி தரப்பு எண்ணுகிறது. இதனால், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படலாம் என்று பொதுக்குழு அழைப்பிதழிலேயே குறிப்பிடப்பட்டது.
அதன்படி, பொதுக்குழுவில் எவ்வாறு கலந்துகொண்டு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும், தீர்மானங்களுக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது தொடர்பாக அ.தி.மு.க-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியானது இன்னும் ஓரிரு தினங்களுக்கும் நடக்கவுள்ளது. அதேநேரத்தில், பொதுக்குழுவை நேரடியாக நடத்தும் பணிகளையும் எடப்பாடி தரப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.