அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும். பொதுக்குழுவில் இ.பி.எஸ் நினைப்பது நடக்கும் என்று வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது, ஜூலை 11 ஆம் தேதி பொதுகுழுவை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக. பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 6) உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மஹேஸ்வரி, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். எடப்பாடி பழனிச்சாமி சார்பாக மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜரானார். ஓ பன்னீர்செல்வம் சார்பாக வழக்கறிஞர் மனீந்தர் சிங் ஆஜரானார்.
உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை ஐகோர்ட்டுக்கு குறைவான அதிகாரமே உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
அதேபோல உட்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தீர்வு காண முடியும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு காலாவதியாகிவிட்டது என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது என்றும் உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நட்பு ரீதியில் தீர்வு காண வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.
நட்போ, கருத்து வேறுபாடோ நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் எப்படி தடை விதிக்க முடியும். பொதுக்குழு சட்டப்படி நடைபெற வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடந்து, அதிமுக பொதுகுழுவில் என்ன நடக்கும் இந்த தீர்ப்பு யாருக்கு சாதகமானது, ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இருவரின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க நடந்துவருகிறது.
அதிமுக பொதுக்குழுவில் நட்பார்ந்த ரீதியில் தீர்வு காணுங்கள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளது குறித்து வழக்கறிஞர் தமிழ்மணி ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், “நான் 3 நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி விவாதத்தில் கூறினேன். அதுதான் இப்போது 90 சதவீதம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் ஒன்று ஜூன் 23 ஆம் தேதி விடியற்காலை பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு முடிந்துபோய்விட்டது. அதனால், அதற்கு மேல் மேல்முறையீடு செய்வதில் அர்த்தம் இல்லை. இரண்டாவது,
நீதிமன்றம் உட்கட்சி விவகாரங்களில் தலையிட்டு தீர்வு காண முடியாது. பொதுக்குழு மட்டும்தான் இதில் தீர்வு காண முடியும் என்று கூறினேன். இதைத்தான் நீதிபதிகள் இப்போது உத்தரவாகப் பிறப்பித்துள்ளார்கள்.
நீதிமன்ற உத்தரவு பிறப்பித்த பிறகு, 3 விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்கும். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பு போட்டிருக்கிற வழக்கு அர்த்தம் இல்லாததாகிவிடும். இதில் அடிப்படையானது என்னவென்றால், ஒரு அரசியல் கட்சியினுடைய பொதுக்குழுவில் உட்கட்சி விவகாரங்கள் நடப்பதற்கு முன்னால், நீதிமன்றம் தீர்மானித்து தலையிட இயலாது. ஒருவேளை, ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அது சட்டப்படி, கட்சியின் சட்ட விதிகள்படி செல்லுமா? செல்லாதா என்று பிறகு பரிகாரம் தேடிக்கொள்ள நீதிமன்றத்துக்கு செல்வது வேறு. இதைத்தான் நீதிமன்றம் சொல்லும். அதுதான் சட்டமும் கூட. ஜூன் 23 ஆம் தேதி விடியற்காலை தீர்ப்பு தவறு.” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற கேள்விக்கு கருத்து தெரிவித்த வழக்கறிஞர் தமிழ்மணி, “சந்தேகமே இல்லாமல் இது இ.பி.எஸ்-க்கு சாதகமாக இருக்கும். அதாவது நீதிமன்றம் என்பது ஒரு கட்சியினுடைய உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொன்னால், 2 நீதிபதிகள் இதை விவாதியுங்கள், இதை விவாதிக்கக் கூடாது என்று சொன்னார்களே, அது தவறு. அதைத்தான் உச்ச நீதிமன்றம் கௌரவமான முறையில் இன்று சொல்லி இருக்கிறது.
எனவே, இ.பி.எஸ் நினைப்பது, அவர் எதிர்பார்ப்பது, நடக்க விரும்பியது எல்லாம் கிட்டத்தட்ட நிறைவேறிவிடும்.” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றம் இந்த மாதிரி கருத்து சொல்லியிருக்கிற நிலையில், ஓ.பி.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்து உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் தமிழ்மணி, “நிச்சயமாக இருக்கும். உயர் நீதிமன்றம் என்பது உச்ச நீதிமன்றத்துக்கு கீழே பணியாற்றுகிற நீதிமன்றம்தான். எனவே, தாக்கம் இருக்கும். அது இல்லாவிட்டாலும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிதான் தனி நீதிபதியக இரவு நேரத்தில் அளித்த தீர்ப்பில் நாங்கள் தலையிட முடியாது என்று சொன்னார். எனவே, ஜூன் 22 ஆம் தேதி இரவு அவர் என்ன காரணங்களால், ஒரு கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என்று தீர்ப்பு சொன்னாரோ, அந்த காரணங்கள் இன்றைக்கும் புது வழக்குக்கும் பொருந்தும். எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் தாக்கம் மிக நிச்சயமாக இருக்கும். அதற்கு மேலே, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி சொன்ன தலையிட முடியாது என்ற கருத்தைத்தான் இன்றைக்கு உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, வருகிற வழக்கில், ஓ.பி.எஸ் தரப்பு போட்ட வழக்கில், எந்தவித உத்தரவும் கிடைக்காது.” என்று கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 23 ஆம் தேதி விடியற்காலை அளித்த தீர்ப்பில் 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்த புதிய தீர்மானங்களும் கொண்டுவ் அரக்கூடாது என்று கூறினார்கள். ஆனால், அன்றைக்கு, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது செல்லாது என்று என்று ஓ.பி.எஸ் தரப்பில் சொல்வார்கள் இல்லையா? என்ற கேள்வி குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் தமிழ்மணி, “ஜூன் 23 ஆம் தேதி விடியற்காலை தீர்ப்பளித்த 2 நீதிபதிகள், 23 தீர்மானங்களைத் தவிர வேறு தீர்மானங்களைக் கொண்டுவரக் கூடாது. ஆனால், விவாதிக்கலாம் என்று கூறினார்கள். ஒருவேளை, 23 தீர்மானங்களுக்கு மேல் எந்த தீர்மானமும் கொண்டுவரக் கூடாது என்பதற்கு பதிலாக, எந்தப் பதவிக்கும் யாரையும் கொண்டுவரக் கூடாது என்று சொல்லி இருந்தால் இது பொருந்தும். இன்னொன்று, தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்தது என்பது நீதிமன்ற உத்தரவை மீறியது என்று சொல்லலாமே தவிர, நீதிமன்ற அவமதிப்பு அல்ல. அதே நேரத்தில், இன்றைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு கட்சியின் உள்விவகாரங்களுக்குள் தலையிடக் கூடாது என்று சொன்னது அல்லவா, அது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்வதற்கு உதவியாக இருக்கும்.” என்று கூறினார்.
இதையடுத்து, ஓ.பி.எஸ் தரப்பின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி குறித்து கருத்து தெரிவித்த வழக்கறிஞர் தமிழ்மணி கூறியதாவது: “இந்தக் கேள்விக்கு பதில் எப்போது சொல்ல முடியும் என்றால், ஓ.பி.எஸ் ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறாரா? அல்லது கலந்துகொள்ளவில்லையா? நீதிமன்றத்தில் ஏதாவது ஒரு உத்தரவை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டால், பொதுக்குழுவில் அவர் கலந்துகொண்டால் ஒன்று கலந்துகொள்ளாவிட்டால் இரண்டு, அவர் கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைத்தால் கலந்துகொள்ளவே மாட்டார். தன்னை தியாகியாக அவர்கள் வெளியே அனுப்ப வேண்டும் என்று நினைத்தால், நான் போனேன். ஒற்றைத் தலைமை என பதவியை மாற்றிவிட்டார்கள். என்னை வேண்டும் என்றே அவமானப்படுத்திவிட்டார்கள் என்று சொல்லி, பிறகு கட்சியை விட்டு வெளியே வந்து தனி வீடு அமைக்கலாமா? அல்லது இருக்கிற ஏதாவது ஒரு வீட்டில் போய் அமர்ந்துகொள்ளலாமா என்று யோசிப்பார்” என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, டெல்லியில் இ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கிறது என்றால், 11.07.2022 அன்று நடக்க இருக்கிற பொதுக்குழுவை நீங்கள் நடத்திக்கொள்ளலாம். அதற்கு தடை இல்லை என்று நீதிபதிகள் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறார்கள். அதோடு, அந்த தீர்ப்பின் அடிப்படையில் தொடரப்பட்ட, நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் தடை வழங்கப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
ஒருவேளை இன்றைய உத்தரவுக்கு எதிராகவோ, அல்லது தனி நீதிபதிக்கு முன்னால் யாராவது பொதுக்குழுவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யலாம் என்று ஒரு அறிவுறுத்தலையும் கொடுத்திருக்கிறார்கள். அதனால், இது உங்களுக்கு பாதகமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் இன்பதுரை, “இது எல்லாம் உங்களுடைய கற்பனை. வழக்கு விசாரணையில் இருந்துகொண்டிருப்பதால், நான் ரொம்ப விரிவாக சொல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்தில் நடந்தது என்னவென்றால், ஒரு உட்கட்சி விவகாரத்தால் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும் என்ற பிரதான கேள்வியை நீதியரசர்கள் எழுப்பினார்கள். இறுதியாக, வழங்கிய அந்த தீர்ப்பிலெ, வருகிற 11 ஆம் தேதி நடைபெறவிருக்கிற பொதுக்குழுவை நடத்திக்கொள்ளலாம். அதற்கு ஆங்கிலத்தில் ‘May go on’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், ஏற்கனவே, இது தொடர்பாக உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்திருக்கிறார்கள். அதனால், நாளை நடைபெறவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கும் தடை பொருந்தும் என புரிந்துகொள்ளப்படும்.
எடப்பாடி பழனிசாமி சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்னவாக இருக்கும்? அதெல்லாம் தலைவர்கள் கூடி முடிவெடுப்பார்கள், நீதிமன்றத்தில் நடந்ததைக் கேட்டீர்கள். நான் அதைக் கூறிவிட்டேன்.” என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“