விவசாயிகளுக்கு மலிவு விலையில் பலன் தரும் செடிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை பல வித நாற்றுகளை உற்பத்தி செய்து, நர்சரிகள் மூலம் வழங்குகிறது. ஊடுபயிர்கள், பலன் தரும் செடிகளை தேர்வு செய்யவும், நர்சரிகளில் மலிவு விலையில் பெறவும் வழிமுறைகளை கூறுகிறார் வேளாண்மை இணை இயக்குநர் பா.இளங்கோவன்,
”தோட்டக்கலைப் பயிர்களில் தென்னந்தோப்பில் ஊடுபயிராக நடுவதற்கு ஏற்ற பாக்கு, மிளகு செடிகள், வேலிப்பகுதியில் நடுவதற்கு ஏற்ற சில்வர் ஓக், தேக்கு, பலா, புளி போன்ற மரக்கன்றுகள் தரப்படுகின்றன.
இதே போல எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, குருத்து ஒட்டு திசு வளர்ப்பு முறையில் வளர்ந்த மாதுளை மற்றும் கறிவேப்பிலை, செடி முருங்கை, ரோஜா, மல்லிகை, ஜாதிக்காய் முதலிய பல மரக்கன்றுகளும் அரசு தோட்டக்கலைப் பண்ணை மூலம் வழங்கப்படுகின்றன.
நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் ஆண்டு முழுவதும் இத்தகைய மரம் நடும் பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 2 அல்லது 3 புதிய பயன் தரும் தோட்டக்கலைப் பயிர்களை தனது பண்ணையில் தேர்வு செய்து நட்டால் தான் நல்ல பலன் கிடைக்கும்.
இதே போல பல தனியார் நர்சரி மூலம் விற்கப்படும் கன்றுகள் நல்ல நிலையில் உள்ளதா என ஆய்வு செய்து வாங்க வேண்டும்.
அவர்கள் பில் தரும் நிலையில் அரசிடம் பதிவு செய்ததா? என்று விசாரித்து அந்த நர்சரியில் செடிகள் வாங்க வேண்டும்.
தோட்டக்கலைத்துறையின் மூலம் மதிப்பு சான்று பெற்ற நர்சரிகள் நல்ல கன்றுகளை தர இயலும். எனவே, விவசாயிகள் தமக்கு தேவைப்படும் கன்றுகளை அரசின் பண்ணைகளில் பெறவும். அந்தந்தப் பகுதி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் பரிந்துரை பெற்று நல்ல கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
தாம் புதிய பயிர்கள் நடவு செய்ய உள்ள பகுதியினை காண்பித்து உரிய பயிர் வகைகளைத் தேர்வு செய்யலாம். மேலும் விபரம்பெற அலைபேசி எண். 98420 07125 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.