சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை ராஜ்யசபாவுக்கு நியமன எம்.பி.க்களாக குடியரசுத் தலைவர் நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய கேரளாவைச் சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கணை பி.டி.உஷா, ஆந்திராவை சேர்ந்த திரைப்பட கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பெரும் பங்காற்றியவர் இளையராஜா. 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ள அவர் ஐந்து முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். இளையராஜாவுக்கு இந்திய அரசு பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி இருக்கிறது.
இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, தனது ட்வீட்டில் “இளையராஜாவின் படைப்பு தலைமுறைகளைக் கடந்து மக்களை மகிழ்வித்திருக்கிறது. அவரின் இசை பல உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறது. அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கைப் பயணமும் ஊக்கமளிக்கக்கூடியது. அவர் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து வளர்ந்து நிறைய சாதித்துள்ளார். அவர் ராஜ்யசபாவுக்கு வருவதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.