நாகை அருகே, மீன் விற்பனை மற்றும் ஏலம் தொடர்பாக இரு மீனவ கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீனவ கிராமத்தில் புகுந்து வீடு, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதற்கும், ஏலம் விடுவதற்கும் மேல பட்டினச்சேரி மற்றும் கீழப்பட்டினச்சேரி மீனவர்களுக்கு இடையே மோதல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
மீன்விற்பனைக்கு தங்களுக்கும் உரிமை வேண்டும் எனக் கோரி மேல பட்டினச்சேரி கிராம மீனவர்கள் போராடி வந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு எடுக்கப்பட்டது.
இதனிடையே மேலபட்டினச்சேரி கிராம நிர்வாகிகள் சுரேஷ், மற்றுமொரு சுரேஷ் உள்ளிட்ட சிலர் மீது மற்றொரு தரப்பு மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் சாலைமறியலுக்காக சென்றிருப்பதை அறிந்த மற்றொரு தரப்பு மீனவர்கள், மேல பட்டினச்சேரி பகுதியில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். 50பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் அப்பகுதியில் நுழைந்து வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானதை அடுத்து, மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க அப்பகுதியில் பாதுகாப்புக்காக அதி விரைவுப்படை போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் காயம் அடைந்த 2பேர் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, வீடுகளில் தாக்குதல் நடத்தி பொருட்களைச் சேதப்படுத்திய வழக்கில் 15 பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.