பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் சோரப் அருகேயுள்ள ஹனவட்டியில் இரு தினங்களுக்கு முன்பு வீரசைவ மந்திராவில் எழுத்தாளர் ஜெயந்த் கைகினியின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டது.
ஜோசப் ஸ்டெய்னின் ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’ நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்ட கன்னட நாடகத்தில் முஸ்லிம் கதாப்பாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன.
ரங்க பெலக்கு நாடக குழுவினர் மாலை 7.45 மணிக்கு நாடகத்தை தொடங்கிய போதே இந்துத்துவ அமைப்பை சேர்ந்த சிலர், “முஸ்லிம் கதாபாத்திரங்கள் நிறைந்த நாடகத்தை வீரசைவ மந்திராவில் நிகழ்த்த விட மாட்டோம்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி நாடகம் தொடங்கியதால் 8.30 மணியளவில் அரங்கத்துக்கு வந்த பஜ்ரங் தளம், ஸ்ரீராம் சேனா அமைப்பினர் மேடையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
பஜ்ரங் தளம் அமைப்பை சேர்ந்த ஸ்ரீதர் ஆச்சார் கூறுகையில், “இந்த நாடகத்தில் இந்துக்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே முஸ்லிம் கதாபாத்திரங்களுடன் நாடகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நாடகத்தை நடத்த கூடாது” என்றார்.
விசாரணை
தகவல் அறிந்து அங்கு வந்த ஹனவட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜீவ் ரெட்டி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார். பார்வையாளர்களையும் இந்துத்துவ அமைப்பினரையும் அரங்கத்தில் இருந்து வெளியேற்றினார். பின்னர் ராஜீவ் ரெட்டி கூறுகையில், “நாடகம் எதற்காக நிறுத்தப்பட்டது என விசாரித்து வருகிறோம்” என்றார்.
இந்துத்துவ அமைப்பினரின் இந்த செயலுக்கு கர்நாடக எழுத்தாளர்கள், நாடக கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்துத்துவ அமைப்பினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.