மெக்காவில் இனி தமிழும் இந்தியும் ஒலிக்கும்

ராமேசுவரம்: முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் புனித ஹஜ் பயணத்தின்போது நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை முதன்முறையாக தமிழ் மற்றும் இந்தியில் ஒலிபரப்பாகிறது.

ஹஜ் பெருநாள் (பக்ரீத் பண்டிகை) உலகளவில் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் முஸ்லிம்களின் புனிதக் கடமையான ஹஜ் யாத்திரையை நிறைவேற்ற கரோனா பரவலுக்கு முன்பு வரை 25 லட்சம் பேர் வரையிலும் புனித யாத்திரை மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக சில ஆயிரம் யாத்ரீகர்கள் மட்டுமே ஹஜ் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு உலகம் முழுவதும் 10 லட்சம் யாத்ரீகர்களுக்கு சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்தது.

இந்த ஆண்டு 65 வயதுக்குட்பட்ட 79,237 இந்தியா்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அவர்களில் 56,601 போ் இந்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 22,636 போ் ஹஜ் குழு ஏற்பாட்டாளா்கள் மூலமாகவும் சென்றனர். இதில் தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் செய்ய விண்ணப்பித்து 1,500 பேர் வயது மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

தாகிர் சைபுதீன்

இந்த ஆண்டு முதல் மெக்காவில் புனித ஹஜ் பயணத்தின்போது நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவு தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட உள்ளது.

இதுகுறித்து பாம்பனை சேர்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர் தாகிர் சைபுதீன் கூறியதாவது:

மெக்காவில் உள்ள அல் நிம்ரா பள்ளிவாசலில் அரஃபா சொற்பொழிவு ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் யாத்திரையின்போது நிகழ்த்தப்படும். அரபியில் ஆற்றப்படும் அந்த உரை இதுவரை ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்யன், சீனம், பெங்காலி, துருக்கியம், ஹௌசா ஆகிய 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது.

14 மொழிகளில் மொழிபெயர்ப்பு

இந்நிலையில், புனித ஹரம் இல்ல நிர்வாகத் தலைவர் ஷேய்க் அப்துர் ரஹ்மான் சுதைசி வழிகாட்டலில் இந்த ஆண்டு முதல் புதிதாக தமிழ், இந்தி, ஸ்பானிஷ், சுவாஹிலி ஆகிய 4 மொழிகள் இணைக்கப்பட்டு 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

தமிழகத்துக்கும் சவூதி அரேபியாவுக்கும் உள்ள தொடர்பு மிகத் தொன்மையானது. இத்தொடர்பு சங்க காலம் முதல் இருந்து வந்ததற்கான அகச் சான்றுகள் நமக்கு கிடைத்திருக்கின்றன.

சங்க காலத்தில் வியாபார நிமித்தமாக ஏற்பட்ட இத்தொடர்பு கி.பி. 6-ம் நூற்றாண்டில் இஸ்லாம் தோன்றிய பின்னர் மேலும் வலுப்பெற்றது. தற்போது மெக்காவில் நிகழ்த்தப்படும் அரஃபா சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு தமிழிலும் ஒலிக்கும் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.