ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புனித யாத்திரை நடைபெறவில்லை. தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 30-ம் தேதி தொடங்கியது. அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் முகாம், கந்தல்பால் மாவட்டம் பால்டால் முகாமில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர். இதுவரை 72,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
இந்த சூழலில் மோசமான வானிலை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முன்பதிவு செய்துள்ள பக்தர்கள், அடிவார முகாம்களில் தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு பகுதியில் பெய்யும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து இயற்கை பாதிப்புகளை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.