ராஞ்சி: தன் மீதான அவதூறு வழக்கில் ஆஜராக கோரி அனுப்பப்பட்ட சம்மன் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘நீரவ் மோடி, லலித் மோடி (வங்கிக் கடன் மோசடி செய்த குற்றவாளிகள்) போன்ற மோடிகள் திருடர்கள்’ என்று பிரதமர் மோடியை குறிப்பிடும் வகையில் பேசியிருந்தார். இவரது பேச்சு மோடி என்பதின் குடும்ப பெயரை கொண்ட அனைவரையும் திருடர்கள் போல் சித்திரிக்கும் வகையில் உள்ளதாக கூறி வழக்கறிஞர் பிரதீப் மோடி ராஞ்சி மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடுத்தார். அதில், ‘ராகுல்காந்தியின் உரை குறிப்பிட்ட சமூக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால் ராகுல் காந்தியிடம் இருந்து 20 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். பிரதீப் மோடியின் வாக்குமூலங்களை பதிவு செய்த மாவட்ட நீதிமன்றம், ராகுல் காந்திக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ராகுல்காந்திக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. மேற்கண்ட மனுவை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.திவேதி, ராகுல் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனால், மாவட்ட நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.