ராஜ்யசபா எம்.பி.யாக இளையராஜா நியமனம் : பிரதமர், ரஜினி, கமல் வாழ்த்து
புதுடில்லி : ராஜ்யசபா எம்.பி.யாக தமிழகத்தைச் சேர்ந்த சினிமா இசையமைப்பாளர் இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சட்டம். விளையாட்டு, சமூக சேவை ,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ராஜ்யசபாவிற்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நியமிக்கலாம். அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் இளையராஜா ராஜ்யபசபா நியமன எம்.பி.யாக இன்று (ஜூலை 07) அறிவிக்கப்பட்டார். தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.
பிரதமர் வாழ்த்து
இளையராஜா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛தலைமுறைகளைக் கடந்து இளையராஜா அவர்களின் அற்புத படைப்பாற்றல் மக்களை மகிழ்வித்து வருகிறது. அவரது இசைப் படைப்புகள் பல்வேறு உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவன. அவரது படைப்புகளைப் போலவே, எழுச்சி ஊட்டுவதாய் அவரது வாழ்க்கைப் பயணமும் அமைந்துள்ளது. எளிய பின்புலத்திலிருந்து உயர்ந்து எட்ட இயலா சாதனைகளை படைத்தவர். அவர் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
ரஜினி வாழ்த்து
ரஜினி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், ‛‛மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.
கமல் வாழ்த்து
கமல் வெளியிட்ட வாழ்த்து குறிப்பில், ‛‛ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இளையராஜா அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும் இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்'' என தெரிவித்துள்ளார்.
எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்
ராஜ்சபா எம்பி.,யாக இளையராஜா நியமனம் செய்யப்பட்டது தொடர்பாக இளையராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் அவர் அமெரிக்காவில் இருப்பதால் பேச முடியவில்லை. வரும் 20ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். ஆனால் அவர் தரப்பில் கூறுகையில், ‛‛இளையராஜா எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். லதா மங்கேஷ்கர், சச்சின் டெண்டுல்கர் போன்று இந்த எம்பி பதவிக்கு அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் குறிப்பிட்ட கட்சியை சார்ந்தவர் என அவரை முத்திரை குத்த வேண்டாம்'' என்றனர்.