சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 100 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பில் சிறப்பான தொழில்நுட்பங்கள் தேவை என தெரிவித்திருந்தாலும் சில முரண்பாடுகளும் இருப்பதாக போக்குவரத்து ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மின்சாரப் பேருந்துகளின் பராமரிப்பு, மாசு குறைவு என்பது முக்கிய சிறப்பு அம்சமாகும். அதிக உபகரணங்கள் கிடையாது.ஆனால் இருக்கும் உபகரணங்களின் விலையோ லட்சத்தில் இருக்கும், எனவே, சிறு பிரச்சினைவந்தாலும் அதை அப்படியே ஓரம் கட்ட வேண்டியிருக்கும்.
இவ்வாறு இருக்க, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் 100 மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்வது தொடர்பான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பு கடந்த வாரம்வெளியிடப்பட்டது. இப்பேருந்துகள் ஜெர்மன் வளர்ச்சி வங்கி நிதிஉதவியுடன் வாங்கப்படவுள்ளன.
அதன்படி, 12 மீட்டர் நீளம் கொண்ட தாழ்தள குளிர்சாதன பேருந்துகள் சார்ஜிங் செய்வதற்கான உள்கட்டமைப்பு, பராமரிப்பு வசதி உள்ளிட்டவற்றுடன் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
இந்த அறிவிப்பில் சில சிக்கல்கள் இருப்பதாக போக்குவரத்து ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசுபோக்குவரத்து ஆர்வலர்கள் அமைப்பின் நிறுவனர் சாந்தப்பிரியன் காமராஜ் கூறியதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் 3,454 பேருந்துகளில் நாள்தோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். முன்னதாக ஒரு தனியார் நிறுவனம் சார்பில் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்ட மின்சாரப் பேருந்துகளின் விலை ரூ.1.50 கோடி. அதன் பேட்டரி விலை சுமார் ரூ.60 லட்சம்.
இந்த விலைக்கு 5 சாதாரண பேருந்துகளை வாங்கி விட முடியும் என்பதாலேயே தொடக்கத்தில் இருந்தே அரசும் மின்சாரப் பேருந்துகளை வாங்க தயக்கம் காட்டி வருகிறது. இதைவிட முக்கியமாக மின்சாரப்பேருந்துகளை நோக்கி பிறமாநிலங்கள் நகர்ந்து சில ஆண்டுகளே இருக்கும். அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை குறித்து யாருக்கும் தெரியாது.
பேருந்துகளில் சராசரியாக 44 பேர் அமர்ந்து பயணிக்கக் கூடிய நிலையில், ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பில் 35 பேர் அமரும் வகையில் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேருந்துக்கு 12 ஆண்டு, பேட்டரிக்கு 8 ஆண்டு ஆயுட்காலம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட 4 ஆண்டுகள் பேருந்தின் நிலை என்ன?
சார்ஜ் செய்யும் திறன் ஆண்டுக்கு எத்தனை சதவீதம் குறையலாம் என்பது குறிப்பிடப்படவில்லை. 400 மிமீ உயரத்தில்பேருந்து இருக்க வேண்டும் என்பதால் பல வேகத்தடைகளை அகற்ற வேண்டிய நிலைஏற்படும்.
மின்சாரப் பேருந்துகள் மாசுபாட்டை குறைக்கும் முன்னெடுப்பு என்பதால் வெளிநாடுகளில் இருப்பது போல் பேருந்தின் முன்புறம் மிதிவண்டியை வைப்பதற்கான கட்டமைப்பு இருந்திருக்கலாம். ஜிபிஎஸ் இல்லாதது பெரிய பின்னடைவு.
கதவின் கீழ் பகுதியில் சீல் செய்யப்பட்டிருக்க வேண்டும். சக்கர நாற்காலி, மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தளம் ஆகியனஒப்பந்தத்தில் சிறப்பு அம்சங்களாகும். சந்தையில் தடம் பதித்த நிறுவனத்தில் பேருந்துகளை வாங்க வேண்டும்.அண்டை மாநிலங்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும்.
பேட்டரி மறுசுழற்சி
குறிப்பாக பேட்டரி போன்றவற்றை மறுசுழற்சி செய்வதற்கு திட்டத்தை வகுக்க வேண்டும். மின்சாரப் பேருந்துகளை நிச்சயம் சாதாரண கட்டணத்தில் இயக்க முடியாது. அதன் பயன் சாதாரண மக்களைச் சென்றடைவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநகர போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளிடம் கேட்டபோது, முதற்கட்டமாக 100 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் தமிழகம் முழுவதும் 500 பேருந்துகளை 2024-ம் ஆண்டுக்குள் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. வரும் 22-ம் தேதிக்குள் ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும். சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்தே ஒப்பந்தம் வழங்கப்படும்.
பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகுதான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கடன் தொகையை கவனத்துடன் கையாள அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, இத்திட்டத்தில் தவறு ஏதும் நிகழாது என்றனர்.