நம் முன்னோர்களின் பாரம்பர்ய விவசாயத்தின் சிறப்பை உணர்ந்து, இயற்கை விவசாயத்தில் இன்று இளைஞர்கள் உட்பட பலரும் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பர்ய விதைகள் கையில் எடுக்கப்பட்டு தற்சார்பை நோக்கிய பயணம் தொடங்கியுள்ளது. இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு வழிகாட்டவும், விதைத் தேர்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த தானியங்களை எளிதில் விற்பனை செய்யும் விதமாகவும் விழுப்புரத்தில் உள்ள ஜெயசக்தி மஹாலில் ‘பாரம்பரிய விதை மற்றும் இயற்கை அரிசி திருவிழா’ நடத்தப்பட்டது.
கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் நடைபெற்ற இந்த திருவிழாவை, பசுமை இயற்கை விவசாய இயக்கத்தினர் ஒருங்கிணைத்து நடத்தினர். 4-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த திருவிழாவில், 1000-த்திற்கும் மேற்பட்ட பாரம்பரிய காய்கறி, நெல், கீரை ஆகியவற்றின் விதைகளும்; 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. மேலும், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களால் செய்யப்பட்ட உணவு வகைகள், மூலிகை மருந்துகள், பழங்கள், தேன், மிளகு போன்ற எண்ணற்ற பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
‘இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்’ என்று ஆர்வமாக வரும் விவசாயிகளுக்காகவும், இயற்கை விவசாயம் குறித்த நுணுக்கங்களை பகிர்ந்துகொள்ளவும், இயற்கை விவசாயிகள் மூலமாக கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இந்தத் திருவிழாவை, விழுப்புரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்த்துச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து, பசுமை இயற்கை விவசாய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாண்டியனிடம் பேசினோம். “இந்த திருவிழா 4-வது ஆண்டாக தொடர்ந்து நடத்தப்படுகிறது. இத்திருவிழாவின் நோக்கம், ‘அனைத்து மக்களுக்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும். அனைவருக்கும் இயற்கை உணவு கிடைக்க வேண்டும்’ என்பதுதான். அதன் அடிப்படையிலேயே தான் நடத்தப்பட்டு வருகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான காய்கறி, நெல், கீரை விதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோடு, 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளும், 50-க்கும் மேற்பட்ட அரிசி வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நம்மில் பலரும் ஓரிரு அரிசி வகைகளை தான் பார்த்திருப்போம், இங்கு நிறைய அரிசி வகைகள் உள்ளன.
இந்த திருவிழாவில், நாங்கள் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு நடத்தும்போது பார்வையாளர்களாக வந்திருந்தவர்கள் இப்போது இயற்கை விவசாயிகளாக மாறியுள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல, கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினரை அழைத்து நாங்கள் பேச வைக்கவில்லை. கடந்த காலங்களில் விதை திருவிழாவிற்கு வந்து விதைகளை வாங்கிச் சென்று நல்ல முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளை கொண்டுதான் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கின் நோக்கம் என்னவென்றால், ரசாயன முறையில் எப்படி விவசாயம் செய்கிறார்கள்… இயற்கை முறையில் எப்படி செய்கிறார்கள் என்பதை விவரிப்பது பற்றியதுதான். புதியதாக ஆர்வத்துடன் வரும் விவசாயிகளையும் ஊக்குவித்து வரவேற்கிறோம்.
மேலும், இயற்கை முறையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டு விதை மற்றும் அரிசித் திருவிழாவை சேர்த்தே நடத்தி வருகிறோம்” என்றார்.