வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: விமானப்படையில், ‘அக்னிபத் ‘ திட்டத்தின் கீழ் சேர 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த காலங்களில் இருந்த நடைமுறைகளின் போது பெறப்பட்ட விண்ணப்பங்களை விட தற்போது தான் சாதனை படைக்கும் அளவுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்திய முப்படைகளில், நான்கு ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் அக்னிபத் திட்டத்தை, மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதற்கான வயது வரம்பு 17.5 முதல் 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கோவிட் காரணமாக 2 ஆண்டுகள் ஆட்கள் தேர்வு நடக்காத காரணத்தினால், இந்த ஆண்டு உச்ச வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு வட மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இருப்பினும், இந்த திட்டத்தின் கீழ் ஆட்களை சேர்க்கும் நடவடிக்கையை இந்திய விமானப்படை கடந்த 24ம் தேதி துவக்கியது. அன்று முதல், ஏராளமானோர் ஆர்வமுடன் விண்ணப்பிக்க துவங்கினர்.
இந்நிலையில் விமானப்படை வெளியிட்ட அறிக்கை: விமானப்படையில் அக்னிவீரர்களாக சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. கடந்த காலங்களில் விமானப்படையில் சேர்வதற்கு வந்த விண்ணப்பங்களில் அதிகபட்சமாக 6,31,528 ஆக இருந்தது. ஆனால், இந்த முறை சாதனை படைக்கும் அளவாக 7,49,899 பேர் அக்னிபத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் விமானப்படை கூறியுள்ளது.
Advertisement