தட்சிண கன்னடா : கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், கடலோர மாவட்ட மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தள்ளது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழையும்; சிக்கமகளூரு, ஷிவமொகா, குடகு, ஹாசன் ஆகிய மலை பிரதேசங்களில் மிதமான மழையும்; பெங்களூரு, மைசூரு, கோலார், ராம்நகர், மாண்டியா, சாம்ராஜ்நகர், சிக்கபல்லாபூர் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசான மழையும் பெய்து வருகிறது.
குடகு
பாகமண்டலாவில் உள்ள திரிவேணி சங்கமத்தில் கரை மூழ்கி, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாகமண்டலா – நாபோக்லு சாலை துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புஷ்பகிரியின் ஹரதுார் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜோடுபாலாவிலிருந்து, மடிகேரி வரை ஆங்காங்கே சாலைகளில் விரிசல் காணப்படுகிறது.மடிகேரி புறநகரின் சாமுண்டீஸ்வரி நகர், ஜஹாங்கிர் பைசார் போன்ற பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மடிகேரி – மங்களூரு சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் நிதானமாக செல்கின்றன. ஒரே நாளில் 128 மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால், பல பகுதிகளில் மின்சாரம் இன்றி இருட்டில் மக்கள் தவித்தனர்.
உத்தர கன்னடா
உத்தர கன்னடா மாவட்டம், ஜொய்டா தாலுகாவில் கோவா செல்லும் தேசிய நெடுஞ்சாலை ‘4 ஏ’ வில், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, ஹுப்பள்ளி – தார்வாட் ஆகிய பகுதிகளில் இருந்து கோவா செல்வோர் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹொன்னாவரா ஹலதிபுரா புகனி கிராசில், கங்காதர ராமகிருஷ்ணா என்பவருக்கு சொந்தமான ஷெட் மீது ராட்சத ஆலமரம் விழுந்தது. இதில் அங்கு, வாடகைக்கு இருந்த ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தட்சிண கன்னடா
பெல்தங்கடியில் 15 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தியது. 71 மின்கம்பங்கள் சாய்ந்தன. அரபி கடலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. குக்கே சுப்பிரமணியாவின் குமாரதாரே நதிக்கரையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியை தாண்டி நீர் வந்தது. ஆபத்தை உணராமல் பக்தர்கள் ஆற்றில் இறங்கினர். இதை கவனித்த போலீசார் அவர்களை வெளியேற்றினர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். நதிக்கரையில் கயிறு கட்டி ஆற்றில் இறங்க தடை விதித்துள்ளனர்.
உடுப்பி
தொடர் கன மழையால், உடுப்பியின் வரங்கா, சீதாவதி, பச்சப்பு, சிவபுரா, ஜரவத்து நதிகள் நிரம்பி வழிகின்றன.
பலி விபரம்
சிக்கமகளூரு மாவட்டம், ஹொஸ்பேட் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி சுப்ரிதா, 6, பள்ளி முடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருக்கும் போது, கம்பள்ளி அடுத்த காபி எஸ்டேட்டில் தவறி விழுந்தார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.உடுப்பி மாவட்டம், குந்தாபுரா தாலுகா, ஹல்லுார் கிராமத்தில், நிலத்தில் நிரம்பிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயி லட்சுமி பூஜார்த்தி, 66, ஈடுபட்டார். அப்போது திடீரென வெள்ளம் அதிகரித்து, அவரை அடித்து சென்றது.இன்னும் நான்கு நாட்களுக்கு தொடர் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர், உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். கடலோர மாவட்டங்களில் நேற்றும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.