சென்னை: வேறு பள்ளிகளைச் சேர்ந்த 11,000 மாணவர்கள் இந்த ஆண்டு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுக்கு 1.50 லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான கட்டமைப்பு உள்ளது. இதைத் தவிர நவீன வகுப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை சிட்டீஸ் திட்டம் மற்றும் சிங்காரச் சென்னை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பள்ளிகளில் கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு வரை ஆண்டுக்கு சராசரியாக 85,000 முதல் 90,000 வரை மட்டுமே மாணவர்கள் படித்தனர். 2020 கரோனா தொற்றுக்கு பின், பொருளாதார பாதிப்பில் சிக்கியவர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை மாநகராட்சிப் பள்ளிகளில் சேர்த்தனர்.
இதனால், 2021–22-ம் கல்வியாண்டில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 1.15 லட்சம் மாணவர்கள் படித்தனர். தனியார் பள்ளிகளில் இருந்து 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்திருந்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை 1.05 லட்சம் மாணவர்கள் சென்னை மாநகாராட்சி பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த ஆண்டில் புதிதாக 20,440 பேர் சேர்ந்துள்ளனர். இதில் 9,356 மாணவர்கள் சென்ன மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். 11,084 மாணவர்கள் வேறு பள்ளிகளைச் சேர்ந்தவர்கள். இதன்படி மொத்தம் 1 லட்சத்து 5,127 மாணவர்கள் படிக்கின்றனர்.
எல்கேஜியில் 3710, யூகேஜியில் 7379, 1-ம் வகுப்பில் 7571, 2-ம் வகுப்பில் 8553, 3-ம் வகுப்பில் 8440, 4-ம் வகுப்பில் 8885, 5-ம் வகுப்பில் 9140, 6-ம் வகுப்பில் 7771, 7-ம் வகுப்பில் 8866, 8-ம் வகுப்பில் 8535, 9-ம் வகுப்பில் 7746, 10-ம் வகுப்பில் 7531, 11-ம் வகுப்பில் 4049, 12-ம் வகுப்பில் 6951 பேர் படித்து வருகின்றனர்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
10-வது மண்டலத்தில் 19,000 பேர்
கல்வித் துறையின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்தையும் ஓர் உதவி கல்வி அலுவலர் கண்காணித்து வருவார். மண்டல வாரியாக மாணவர்கள் எண்ணிக்கை.
- மண்டலம் 1 – 13,446
- மண்டலம் 2 – 9935
- மண்டலம் 3 – 6068
- மண்டலம் 4 – 12,142
- மண்டலம் 5 – 9787
- மண்டலம் 6 – 11,461
- மண்டலம் 7 – 4668
- மண்டலம் 8 – 4293
- மண்டலம் 9 – 13,641
- மண்டலம 10 – 19,686