புதுடில்லி :கடந்த, 18 நாட்களில் எட்டு முறை தொழில்நுட்பக் கோளாறு உள்ளிட்ட காரணங்களால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி, ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம், ‘நோட்டீஸ்’ அனுப்பிஉள்ளது.
தனியார் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் விமானங்கள் பல தொழில்நுட்பக் கோளாறுகளால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளன. கடந்த, 18 நாட்களில் மட்டும் இவ்வாறு எட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் மட்டும் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன.
சீனாவின் சாங்கிங் நகருக்கு புறப்பட்ட இந்த நிறுவனத்தின் சரக்கு விமானம், கோல்கட்டா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தட்பவெப்ப நிலையை தெரிவிக்கும் ரேடார் வேலை செய்யாததால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
எரிபொருள் இருப்பு
அதேபோல், புதுடில்லியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் எரிபொருள் இருப்பை காட்டும் சாதனம் வேலை செய்யவில்லை என காரணம் கூறப்பட்டது.இதேபோல், காண்டலா – மும்பை விமானத்தில் கண்ணாடி ஜன்னலில் விரிசல் ஏற்பட்டதால் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.இவ்வாறு கடந்த, 18 நாட்களில், எட்டு சம்பவங்களில் இந்த நிறுவனத்தின் விமானங்கள் சிக்கியுள்ளன. இதையடுத்து, பயணியரின் பாதுகாப்பு விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, இந்த நிறுவனத்துக்கு, விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலகம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:நடந்த சம்பவங்களை ஆராயும்போது, விமானங்கள் முறையாக பராமரிக்கப்படாதது தெரிய வந்துள்ளது. மேலும், விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், இதுபோன்ற தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
உதிரி பாகங்கள்
கடந்தாண்டு நடத்தப்பட்ட நிதி தொடர்பான ஆய்வின்போது, பணம் கொடுத்தே உதிரி பாகங்களை வாங்குவதும், உதிரி பாகங்களை சப்ளை செய்த நிறுவனங்களுக்கு நிலுவை வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.பயணியரின் பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் அஜாக்கிரதையாகவும், அலட்சியத்துடனும் செயல்படுவதாக தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் இருந்து புதுடில்லி வந்த, ‘விஸ்தாரா’ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், நேற்று டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அடுத்த சில நிமிடங்களில், அதன் இன்ஜின் செயல்படவில்லை.
இதனால் அந்த விமானம் ‘பார்க்கிங்’ பகுதிக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பிரமாண்ட டிரக் உதவியுடன் பார்க்கிங் பகுதிக்கு விமானம் இழுத்து வரப்பட்டது. அதில் இருந்த பயணியர் பத்திரமாக இறங்கினர். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Advertisement