பெங்களூரு : பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், சிறையில் இருந்தவாறே, குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியவை சமூக வலைதளத்தில் பரவியதால், பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.’ஹிஜாப்’ எனும் முஸ்லிம் பெண்கள் முகம், தலையை மறைக்கும் ஆடை விஷயத்தில், நீதிமன்றத்தின் கருத்துக்கு ஆதரவாக, ஷிவமொகா மாவட்டத்தின் பஜ்ரங்தள் பிரமுகர் ஹர்ஷா கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரிக்கின்றனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, இவர்களுக்கு ராஜ உபச்சாரம் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.சிறையிலிருந்தவாறே மொபைல் போனில் ‘செல்பி’; குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசுவது’ சிறைக்குள், ‘ஜாலி’யாக சுற்றும் வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.இதையடுத்து, போலீசார் சிறைக்குள் ரெய்டு நடத்தி, மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பரப்பன அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
சிறையில் இருக்கும் அதிகாரிகளே, உடந்தையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இதையறிந்த ஹர்ஷா குடும்பத்தினர், ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர்.ஹர்ஷா சகோதரி ரஜனி கூறியதாவது:இதுவரை நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். அவர்கள் விதவிதமான ஆடைகள் அணிந்துள்ளனர். சிறைக்குள்ளேயே அனைத்து வசதிகளும் கிடைத்துள்ளதால், ஜாலியாக உள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்ததில் இருந்து, எங்கள் ரத்தம் கொதிக்கிறது.
இதுபோன்ற விஷயங்களை அனுமதித்த சிறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.ஏற்கனவே, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சட்ட விரோதமாக சிகரெட், போதைப் பொருள் வினியோகிக்கும் வீடியோ பரவியது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சிறையில் இருந்த ஏழு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, 500 பக்க அறிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement