ெசாத்து குவிப்பு புகார் எதிரொலி: காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீடுகளில், ஊழல் தடுப்பு படை சோதனை

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் ஜமீர் அகமதுகான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் ஜனதாதளம் (எஸ்), காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மந்திரியாகவும் பணியாற்றியவர் ஆவார். தொழில் அதிபரான ஜமீர் அகமதுகான் டிராவல்ஸ் நிறுவனம் உள்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் பெங்களூரு சிவாஜிநகரில் ஐ.எம்.ஏ. நகைக்கடை நடத்திய மன்சூர்கான் என்பவர் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.4 ஆயிரம் கோடியை மோசடி செய்துவிட்டு தப்பி சென்று விட்டார். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமலாக்கத்துறை

ஐ.எம்.ஏ. நகைக்கடை மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ரோஷன் பெய்க், ஜமீர் அகமதுகான் ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 பேரின் வீடுகளில் இருந்தும் சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது. நகைக்கடை மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு அவ்வப்போது ஜமீர் அகமதுகான் ஆஜராகி வருகிறார்.

பணப்பரிமாற்றம்

இந்த நிலையில் கடந்த ஆண்டு (2021) வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின்பேரில் ஜமீர் அகமதுகானின் வீடு, டிராவல்ஸ் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஜி.எப். பாபுவிடம் டெல்லியில் வைத்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது கே.ஜி.எப்.பாபுவுக்கும், ஜமீர் அகமதுகானுக்கும் இடையே பணப்பரிமாற்றம் இருப்பதும் தெரியவந்தது.

ஊழல் தடுப்பு படை சோதனை

இந்த நிலையில் பெங்களூரு கன்டோன்மெண்ட் ரெயில் நிலையம் அருகே பம்பு பஜாரில் உள்ள ஜமீர் அகமதுகானுக்கு சொந்தமான அரண்மனை வீடு, விஜய் மல்லையா ரோட்டில் உள்ள சில்வர் ஒக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு, சதாசிவநகரில் உள்ள வீடு, கலாசிபாளையாவில் உள்ள டிராவல்ஸ் அலுவலகம், பனசங்கரியில் உள்ள அலுவலகத்தில் நேற்று ஒரே நேரத்தில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர்.

ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டுகள் ஹரீஷ் பாண்டே, யத்தீஷ் தலைமையில் இந்த சோதனை நடந்து இருந்தது.

ஆவணங்கள் சிக்கின

இந்த சோதனையில் 40-க்கும் மேற்பட்ட ஊழல் தடுப்பு படை போலீசார் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணி முதல் சோதனை நடந்தது. சோதனை நடந்த 5 இடங்களிலும் போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.பெங்களூரு பம்பு பஜாரில் உள்ள வீட்டில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்திய போது அங்கு ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. இருந்தார். அவரிடமும் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர். கழிவறைகள், சமையல் அறைகளிலும் சோதனை நடந்து இருந்தது.

இந்த நிலையில் சதாசிவநகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் இருந்து சில ஆவணங்கள் ஊழல் தடுப்பு படையினருக்கு கிடைத்ததாகவும், அந்த ஆவணங்களை அதிகாரிகள் ஸ்கேன் செய்ததாகவும், பின்னர் அந்த ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சதாசிவநகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்த போது குமாரசாமிக்கு, ஜமீர் அகமதுகான் அன்பளிப்பாக கொடுத்து இருந்தார்.

அமலாக்கத்துறை தகவல்

ஆனால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகிய பின்னர் அந்த வீட்டை திரும்ப தரும்படி கேட்டார். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு பின்னர் குமாரசாமி அந்த வீட்டை காலி செய்து இருந்தார். தற்போது அந்த வீட்டில் ஜமீர் அகமதுகானின் மகன் வசித்து வருகிறார்.

ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய போது ஜமீர் அகமதுகான் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்ததை அறிந்த அமலாக்கத்துறையினர் இதுகுறித்து ஊழல் தடுப்பு படைக்கு தகவல் கொடுத்ததாகவும், அந்த தகவலின் அடிப்படையிலேயே தற்போது ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆதரவாளர்கள் போராட்டத்தால் பரபரப்பு

காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தியதை கண்டித்து பம்புபஜாரில் உள்ள ஜமீர் அகமதுகான் வீட்டின் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள், ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீஸ் தேர்வு முறைகேட்டில் அம்ருத்பால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை மறைக்கவே ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. வீட்டில் ஊழல் தடுப்பு படை சோதனை நடத்துவதாக கூறி கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.