ஒட்டாவா:காலாவதியான, 1.36 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை குப்பையில் கொட்ட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
வட அமெரிக்காவைச் சேர்ந்த கனடா, ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய, ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது. அதன்படி இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி பெறப்பட்டது. கடந்த, 2021 ஜூன் நிலவரப்படி, 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி செலுத்திய வெகு சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப் பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பைசர், மாடர்னா நிறுவனங்களின் தடுப்பூசியை கனடா கொள்முதல் செய்து, மக்களுக்கு செலுத்தியது.தேங்கியிருந்த, 1.77 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக கனடா அறிவித்திருந்தது.
இந்நிலையில், 1.36 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து காலாவதியாகி விட்டதால், குப்பையில் கொட்ட உள்ளதாக கனடா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசிக்கான தேவை குறைந்து உள்ளதாலும், அவற்றை வினியோகிப்பதில் உள்ள சவால்கள் காரணமாகவும், அவற்றை பல நாடுகள் வாங்க மறுத்து விட்டதாக, கனடா கூறியுள்ளது.
எனினும், கனடா, 48 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ஐ.நா., திட்டத்தில், 41 லட்சம் தடுப்பூசி என, 89 லட்சம் தடுப்பூசி மருந்தை இலவசமாக வழங்கியுள்ளது. கனடாவில், 85 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். உலகளவில், 61 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். ஆனால் ஏழை நாடுகளில், 16 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
Advertisement