19 மாதங்களில் ரூ.358.50 உயர்வு.. 2021 ஜனவரி முதல் சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாதாந்திர பட்ஜெட்டில் தூண்டுவிழச் செய்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த 19 மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.358.50 உயர்ந்துள்ளது. 2021 ஜனவரி முதல் இன்று வரை சிலிண்டர் விலை கடந்து வந்த பாதை இதோ!
ஜனவரி 1 – ரூ.710.00
பிப்ரவரி 25 – ரூ.810.00
மார்ச் 1 – ரூ.835.00
ஏப்ரல் 1 – ரூ.825.00
ஜூலை 1 – ரூ.850.00
ஆகஸ்ட் 17 – ரூ.875.00
செப்டம்பர் 1 – ரூ.900.00
அக்டோபர் 6 – ரூ.915.00
மார்ச் 2022 – ரூ.965.50
மே 2022 – ரூ.1,018.50
ஜூலை 2022 – ரூ.1,068.50
2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஒரு சிலிண்டர் 710 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அடுத்து வந்த மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து ஏற்றத்தை கண்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 900 ரூபாயாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலை அக்டோபர் மாதத்தில் 915 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
LPG coverage ratio: LPG cylinder now used by 89% households
2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 965 ரூபாய் 50 காசுகளுக்கும், மே மாதத்தில் ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 68 ரூபாய் 50 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
“மானியமும் மர்மமாக குறைந்துவிட்டது” – மக்கள்
சர்வதேச அளவில் உள்ள எல்.பி.ஜி விலையுடன் உள்நாட்டில் போக்குவரத்து, சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பும் கட்டணம், டீலர் கமிஷன் உள்ளிட்டவைகளைக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சிலிண்டர் 700 ரூபாய் வரை விற்கப்பட்டபோது, சுமார் 300 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டது.
ஆனால், தற்போது சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டதோடு 25 ரூபாய் மட்டுமே மானியமாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் வருந்துகின்றனர். கூலித் தொழில் செய்து வாடகை வீட்டில் வசிக்கும் தங்களுக்கு சரிவர உணவு சாப்பிட வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

“வாங்கும் சம்பளத்தில் ரூ.1,000க்கும் மேல் சிலிண்டர் வாங்கினால் மற்ற செலவுகளை எப்படி சமாளிப்பது? சிலிண்டர் இருப்பதால் ரேஷனில் மண்ணெண்ணெய் கிடையாது. வாடகை வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது. விறகு அடுப்பு என்றால் வீட்டை காலி செய்ய சொல்கிறார்கள்” என சிலிண்டர் விலை உயர்வு குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக உள்ள நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது ஏழை, நடுத்தர மக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.