கர்னூல்: 8-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், ஆதோனியில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியர் 47.40 லட்சம் பேருக்கு தோளில் மாட்டிச்செல்லும் வகையில் உள்ள பைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் ஜெகன் பேசியதாவது:
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் இந்த பைகளை இலவசமாக வழங்குகிறோம். இதன் மூலம் 47,40,421 பேர் பயன் அடைவர். இதற்காக அரசு ரூ.931 கோடி செலவு செய்துள்ளது.
இது கல்வி பரிசு எனும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 3-ம் ஆண்டாக இதை வழங்கி வருகிறோம்.
ஆங்கிலவழிக் கல்வி அவசியம்
ஒவ்வொருவரும் ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டும். அதுவே உயர் கல்வி பயில மிகவும் உதவிகரமாக இருக்கும். அதே சமயம் தாய் மொழியையும் நாம் மறந்து விடக்கூடாது.
தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் தலா ரூ.15 ஆயிரம் செலுத்தப்படுகிறது. அன்றும்-இன்றும் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.
8-ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கு ‘டேப்லெட் கம்ப்யூட்டர்கள்’ வழங்குவோம். இதன் மூலம் மாணவர்கள் விரைவில் கல்வி அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.
ஒவ்வொரு டேப்லெட்டின் மதிப்பு ரூ.12 ஆயிரம் ஆகும். தற்போது வழங்கப்பட்டுள்ள புத்தகப் பையின் விலை ரூ.2 ஆயிரம் ஆகும். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக பள்ளி சீருடை, ஷூக்கள், சாக்ஸ்கள் போன்றவையும் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 7 லட்சம் மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேசினார்.