அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி,
வருகின்ற 11ஆம் தேதி நடக்க உள்ள அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என்ற ஒரு உத்தரவையும்,
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழத்திற்கு இடைக்கால தடை உத்தரவையும்,
அதிமுக பொது குழு கூட்டம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளை நிறுத்தி வைப்பதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகள் அனைத்தையும் பிறப்பித்த பின்னர் நீதிபதிகளிடம், ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கத்திறகாக ஒரு கேள்வி ஒன்றினை எழுப்பினார். அதில், அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டம் சம்பந்தமாக இடைக்கால நிவாரணங்கள் பெறுவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடலாமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ஏற்கனவே உத்தரவில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. நீங்கள் உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு முன்பு முறையிட்டு தீர்வு கண்டு கொள்ளலாம் என்று மீண்டும் ஒருமுறை தெரிவித்தனர்.
ஆக, ஓபிஎஸ் தரப்புக்கு தற்போதைக்கு உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அமர்வு மட்டுமே ஒரே வழி. ஆனால், ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ் தரப்பு பாதகமாவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.