கீவ்: உக்ரைன் ராணுவத்தில் தன்னார்வலராக சேர்ந்த பிரேசில் மாடல் அழகி, ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. கடந்த 4 மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கிறது. இதனிடையே, பிரேசில் மாடல் அழகி தலிட்டா டு வல்லே (39) (ஸ்நைப்பர்) மற்றும் பிரேசில் முன்னாள் ராணுவ வீரர் டக்லஸ் புரிகோ ஆகியோர் உக்ரைன் ராணுவத்தில் தன்னார்வலராக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சேர்ந்தனர். இவர்கள் கார்கிவ் பகுதியில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கார்கிவ் பகுதியில் உள்ள ஒரு பதுங்கு குழியை குறிவைத்து ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் பதுங்கு குழியில் இருந்த தலிட்டா கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் டக்லஸ் புரிகோவும் கொல்லப்பட்டார்.
யூடியூபில் வீடியோ
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தலிட்டா, தனது பயணம் மற்றும் பயிற்சி குறித்த வீடியோவை யூடியூபில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் மாடலான தலிட்டா, ஏற்கெனவே இராக்கின் குர்திஸ்தான் பகுதி ராணுவத்தில் சேர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பணியாற்றி உள்ளார். அங்கு அவர் ஸ்நைப்பர் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் விலங்குகள் மீட்புக் குழுவிலும் பணியாற்றி உள்ளார்.
உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து, லுஹான்ஸ்கின் பக்கத்து மாகாணமான டோனெட்ஸ்க்கை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அந்நாட்டு ராணுவத்துடன் ரஷ்ய ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.