அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தொடுத்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு வினாக்களை எழுப்பி அதற்குப் பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டிருந்தார்.
இரண்டாம் நாள் விசாரணையின்போது அதற்கு இபிஎஸ் வழக்கறிஞர் விஜய் நாராயண் பதிலளித்தார். அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும், ஜூலை 11ஆம் நாள் பொதுக்குழு கூட்டுவதற்கு 82 விழுக்காடு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டுப் பொதுக்குழுவில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதாகத் இபிஎஸ் தெரிவித்தார். பொதுக்குழு அங்கீகாரம் பெறாததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதால் அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் 74 பேர் புதிய தலைமை வரும்வரை செயல்படுவார்கள் என இபிஎஸ் தெரிவித்தார். அதன் அடிப்படையில் தலைமைக்கழக நிர்வாகிகள் வரும் 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிவித்தார்.
ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென இடைக்காலப் பதில் மனுவில் இபிஎஸ் கோரியுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர்கள் உத்தரவின் அடிப்படையில் தான் உட்கட்சித் தேர்தல் நடைபெற்றதாகவும், ஒட்டுமொத்தமாக உட்கட்சித் தேர்தல் நடந்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் மட்டும் காலியாக இருப்பதாக எப்படிக் கூற முடியும்? என்றும் ஓபிஎஸ் வழக்கறிஞர் வினவினார். தலைவர்கள் இறந்தபோது தான் பதவி காலி எனக் கருத முடியும் எனத் தெரிவித்தார்.
இரண்டு நாட்களாக நடைபெற்ற விசாரணையில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. இதையடுத்து ஜூலை 11 காலை 9 மணிக்குத் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அறிவித்தார்.
அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் ஜூலை 11ஆம் நாள் காலை ஒன்பதே கால் மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குமுன் 9 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் என நீதிபதி தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.