கள்ளக்குறிச்சியில் இன்று சசிகலா மேற்கொண்ட புரட்சிப்பயணத்தில் பேசியதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், உங்களையெல்லாம் இன்று சந்தித்ததில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடைய அன்பும், ஆதரவும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
புரட்சித்தலைவர் அவர்கள் தான் சிறுவயதில் பட்ட கஷ்டங்களையெல்லாம் மனதில் வைத்துதான், ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்கும் வகையில் “சத்துணவு திட்டம்” என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மிதிவண்டி, சீருடை, நோட்டு புத்தகம், மடிக்கணினி, கிராமப்புற ஏழை எளியவர்களுக்கு ஆடு மாடு வழங்கும் திட்டம், மகளீருக்கு விலையில்லா கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி வழங்கும் திட்டம் போன்ற எண்ணிலடங்கா மக்கள் நலத் திட்டங்களை கொடுத்துள்ளார்கள்.
திமுகவினர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்த திட்டங்களை மூடுவிழா செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒட்டு போட்ட மக்களுக்கு இழைக்கும் அநீதி என்பதையும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவினர் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். அவர்கள் சொன்ன 505 வாக்குறுதிகளில் தற்போது எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் எனபது யாருக்கும் தெரியாது. ஆனால், நான் செல்கின்ற இடங்களில் என்னை சந்திப்பவர்கள் சொல்வது என்னவென்றால், குடும்ப தலைவிக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் தரப்படும், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும், சமையல் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை போட்டோம்.
தற்போது நம்பித்தான் ஒட்டு நாங்களெல்லாம் ஆனால் ஏமாந்துவிட்டோம் என்று வேதனை தெரிவிக்கிறார்கள். போன்ற திமுகவினரின் 13 மாத ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. தற்போது, கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களிடம் செயின் பறிப்பு செய்திகளைத்தான் நம்மால் தினமும் பார்க்கமுடிகிறது . இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை தான் காட்டுகிறது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சி காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அது இப்போது இல்லை என்று பொதுமக்கள் அனைவரும் என்னிடம் சொல்கின்றனர். அதேபோன்று, முதியோர் உதவி தொகை, தற்போது, யாருக்குமே கிடைப்பதில்லை என்று, நான் செல்கின்ற இடங்களில் எல்லாம், சொல்லி என்னை சந்திப்பவர்கள், வேதனைப்படுகிறார்கள்.
எனவே, தமிழக அரசு இதை உடனே கவனித்து, முதியவர்களை தொடர்ந்து அலைய விடாமல், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனேவே கொடுத்து கொண்டிருந்த முதியோர் உதவி தொகையை, எந்த தடையும் இல்லாமல் விரைந்து அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருக்கும் நான் மட்டும் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். யாரும் கவலை படாதீர்கள். அடுத்து அமைய போவது நமது ஆட்சி தான். அது மக்களுக்கான ஆட்சியாக இருக்கும். புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் வழியில் ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கான ஆட்சியாக அமையும் என்பதையும் இந்நேரத்தில் உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி நிச்சயம் நாளை நமதே.