திருவனந்தபுரம்: கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசில் கலாசாரம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சராக இருந்தவர் சஜி செரியான். செங்கணூர் தொகுதி எம்எல்ஏ.வான இவர், சில தினங்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொச்சைப்படுத்தி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால், நேற்று முன்தினம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.அதே நேரம், செரியான் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கேரளா முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அவை கிடப்பில் போடப்பட்டதால், செரியான் மீது வழக்கு பதிவு செய்யும்படி கொச்சியை சேர்ந்த பைஜு நோயல் என்பவர் தொடர்ந்த வழக்கில் திருவல்லா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செரியான் மீது கீழ்வாய்ப்பூர் போலீசார் நேற்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 3 வருடங்கள் வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில், தனது எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கேரள சட்டசபையில் வலியுறுத்தி உள்ளன.