வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
காரைக்கால்: காரைக்காலில் மீன்பிடி துறைமுகத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் ஆய்வு செய்து, மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில், மத்திய இணை அமைச்சர் முருகன் மீனவர்களை சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். இதில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மீனவர்கள், இலங்கையில் உள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை விரைந்து மீட்டுத்தர வேண்டும். மீனவர்களுக்கு இலவச டீசல் வழங்க வேண்டும். மீனவ கிராமங்களுக்கு சாலை, குடிநீர் வசதிகள் மேற்படுத்த வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காசாக்குடிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் முருகன் ஆறுதல் கூறினார். அவர்கள் கண்ணீர் மல்க அமைச்சர் காலில் விழுந்து, மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
பின்னர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் முருகன் ஆய்வு செய்தார். மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்து தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது, மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன், துணை தலைவர் அருள்முருகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:
காரைக்கால் மாவட்டத்தில் காலரா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. ஆன்லைன் விளையாட்டு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
கொரோனா காலகட்டத்தில் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருந்தும், மீன் உணவுப் பொருட்கள் அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி 32 சதவீதம் உயர்ந்து அன்னிய செலாவணி ஈட்டி உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. மீன்பிடி துறைமுகங்கள் மீன் இறங்குதளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்த, பிரதமர் ரூ. 32,500 கோடியை ஒதுக்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement