சென்னை: அதிமுக பொதுக்குழுவை இணைய வழியில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது சாத்தியமா என்பது குறித்து அரசியல் ஆலோசகர் ஆஸ்பயர் சுவாமிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
பழனிசாமி தரப்பினர் வரும் 11-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். கூட்டத்தில் பங்கேற்போருக்கு அழைப்பு கடிதமும் கட்சி தலைமை அலுவலகம் மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.
இரு தரப்பிலும், சட்டப் போராட்டம் ஒருபுறம் தீவிரமாக நடந்தாலும், சென்னையில் அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக ஒருவேளை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், அந்த தடையை எதிர்கொள்ளவும் தயாராக இருப்பதற்கான ஏற்பாடுகளையும் இபிஎஸ் தரப்பு செய்து வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இணையவழியில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்கிடையே கட்சியின் தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலர் ஆதி ராஜாராம், மாவட்ட செயலர்களால் அனுப்பப்படும் தொண்டர்களுக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் சமூக வலைதள பயிற்சி அளித்து வருகிறார். இணையவழி கூட்டங்கள் நடத்தவும் அங்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபற்றி ஆதி ராஜாராமிடம்கேட்டபோது, ‘‘சமூக வலைதளங்களில் எப்படி ஒருவரை பின்தொடர்வது, அதிமுகவுக்கு எதிராக வரும் பதிவுகளுக்கு எப்படி பதிலடி கொடுத்து பதிவிடுவது, ஒரு பதிவை ட்ரெண்ட் செய்வது எப்படி, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்துதான் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருவேளை பொதுக்குழுவை இணையவழியில் நடத்த நேர்ந்தால், எப்படி கூட்டத்தில் பங்கேற்பது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 2 நாட்களில் 500 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். 10-ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது’’ என்றார்.
அதிமுக பொதுக்குழுவை இணையவழியில் நடத்துவது சாத்தியமா? அது சட்டப்படி செல்லுமா? என கேட்டபோது, அதிமுகவின் முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலரும், அரசியல் ஆலோசகருமான ஆஸ்பயர் சுவாமிநாதன் கூறியதாவது:
வழக்கமாக பொதுக்குழு கூட்டங்களில் ஒருவர் தீர்மானத்தை முன்மொழிவார். அதை 3 பேர் வழிமொழிவார்கள். அதை ஏற்பவர்கள் கையை உயர்த்துவார்கள். பின்னர் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டதாக கையெழுத்திடுவார்கள். அப்போதுதான் அந்த தீர்மானம் செல்லும். இதை எல்லாம் இணையவழியில் செய்ய முடியாது.
தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள டிஜிட்டல் கையெழுத்தை இவர்கள் பயன்படுத்த வேண்டுமானால், பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருக்கும். அதற்கு ஏற்ற தொழில்நுட்ப கட்டமைப்புகளை எளிதில் உருவாக்க முடியாது. அப்படியே டிஜிட்டல் கையெழுத்திட்டாலும் நம்பகத்தன்மை இருக்காது.
வங்கியில் டிஜிட்டல் கையெழுத்து இடுகிறோம் என்றால், அவர்களிடம் நமது மாதிரி கையெழுத்து ஏற்கெனவே இருக்கும். ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்ய முடியும். பொதுக்குழுவில் அப்படி செய்ய முடியாது.
டிஜிட்டல் கையெழுத்திடுவதை வருமான வரித் துறை நடவடிக்கைகளுக்கும், நிறுவனங்களின் பதிவாளர்கள் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், இதுபோன்ற உட்கட்சி விவகார கூட்டங்களில் இடும் டிஜிட்டல் கையெழுத்துகள் செல்லத்தக்கது இல்லை. அதில் நம்பகத்தன்மையும் இருக்காது. எனவே இணையவழி பொதுக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.