வாஷிங்டன்:ரஷ்ய ஏவுகணை இறக்குமதி தொடர்பான பொருளாதார தடையில் இருந்து, இந்தியாவுக்கு விலக்களிக்கும் சட்டத் திருத்த மசோதா, அமெரிக்க பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ல், கிரீமியாவை ரஷ்யா ஆக்கிரமித்ததை கண்டித்து, அந்நாட்டின் அதிநவீன ‘எஸ் – 400’ ஏவுகணைகளை இறக்குமதி செய்ய, அமெரிக்கா தடை விதித்தது. இதை மீறி, ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்கிய துருக்கிக்கு, ‘காட்சா’ சட்டத்தின் கீழ், அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.
இந்நிலையில், இந்தியா, 2018ல் ரஷ்யாவிடம் இருந்து, 36 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து ‘எஸ் – 400’ ஏவுகணைகள் வாங்க ஒப்பந்தம் செய்தது. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் எச்சரிக்கையை மீறி, இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்தது. பின், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றதும், ‘ரஷ்ய ஏவுகணையை வாங்குவதால், இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்றே கூறி வருகிறார்.
இந்நிலையில், காட்சா சட்டப்படி பொருளாதார தடை விதிப்பதில் இருந்து, இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்த மசோதா, அமெரிக்க பார்லி.,யில் நேற்று தாக்கல் செய்யப் பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.,யான ரோ கன்னா, இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு முயற்சிகளை தடுக்கவும், சொந்த ராணுவ பலத்தை பெருக்கவும், இந்தியாவுக்கு ரஷ்யாவின் அதி நவீன ஏவுகணைகள் தேவைப்படுகின்றன.அதனால், காட்சா சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்களிக்க வேண்டும்.
இது, இந்தியா – அமெரிக்கா ராணுவ ஒப்பந்தத்திற்கு மேலும் வலுசேர்க்கும். இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு, கட்சி பாகுபாடின்றி அனைத்து எம்.பி.,க்களும் ஒருமித்த ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த சட்டத் திருத்தம் நிறைவேறினால், அது இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த முக்கிய வெற்றியாக கருதப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement