வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் போதை மருந்து கடத்தல் வழக்கில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு, மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பை மீறி நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தென்கிழக்காசிய நாடான சிங்கப்பூரில், 15 கிராமிற்கு மேல் போதை பொருள் வைத்திருக்கும் குற்றத்திற்கு துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கல்வந்த் சிங்,31 என்பவர், 120 கிராம் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில், 2013ல் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
‘கல்வந்த் சிங் ஒரு தபால்காரராகத் தான் பொருளை சேர்ப்பிக்க வந்தாரே தவிர, அதில் இருப்பது போதைப் பொருள் என்பது அவருக்கு தெரியாது’ என, கல்வந்த் சிங் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். கல்வந்த் சிங்கும் கருணை மனுக்களை வழங்கினார். ஆனால் அவையெல்லாம் நிராகரிக்கப்பட்டு நேற்று துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, தண்டனையை நிறுத்தக் கோரி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர் துாதரகம் முன் மனித உரிமை ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வந்தனர்.
கல்வந்த் சிங் உடன், நோராஷரீ பின் கவுஸ் என்பவருக்கும் போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிங்கப்பூர் சிறைகளில் துாக்கு தண்டனையை எதிர்நோக்கி, நுாற்றுக்கும் அதிகமானோர் உள்ளனர். துாக்கு தண்டனை சட்டத்தை ரத்து செய்யுமாறு உலக நாடுகள் விடுத்துள்ள கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்துள்ளது. போதை பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கவே, கடுமையான துாக்கு தண்டனை சட்டம் அமல்படுத்தப்படுவதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement