இம்முறை சிறுபோகத்தில் பயிரிடப்பட்ட நெல் வயற்காணி ஐந்து இலட்சத்து ஐயாயிரம் ஹெக்டேயரைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் அதிகாரிகள் நேற்று (07) அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ,விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவைச் சந்தித்து உரம் விநியோகம் தொடர்பில் கலந்துரையாடியதுடன், அந்தக் கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ராஜிகா விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கு விவசாயத்தின் வெற்றி மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஜூன் மாதம் முதல் வாரத்தில் 238இ000 ஹெக்டேயர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்திருந்ததை விட இரண்டு மடங்கு பயிரிடுவதற்கு விவசாயிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.