புதுடெல்லி: இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது, பாலிஸ்டர் உள்ளிட்ட அனைத்து வகையான தேசியக்கொடிகளின் விற்பனைக்கும் ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள் மூலம் ஏராளமான விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் தேசியக்கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய தேசியக்கொடி குறியீடு சட்டத்தின்படி, பருத்தி, பட்டு, கம்பளி மற்றும் கதர் துணிகளில் கைத்தறி மற்றும் கையால் தயாரிக்கப்படும் தேசியக் கொடிகளின் விற்பனைக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் மேற்கொள்ளப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, பாலியஸ்டர் துணி மற்றும் இயந்திரத்தால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி கிடையாது என ஒன்றிய நிதி அமைச்சகத்தின் வருவாய் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.இது குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘தேசியக் கொடி குறியீடு சட்டத்தின் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அனைத்து வகையான தேசியக் கொடிகளின் விற்பனைக்கும் ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,’ என விளக்கம் அளித்துள்ளார். நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுவதற்காக, ‘ஹர் கர் திரங்கா’ எனும் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு தொடங்கி உள்ள நிலையில், இத்தகைய ஜிஎஸ்டி வரி விலக்கு குறித்து நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.விமான எரிபொருளுக்கான கலால் வரி விலக்குவெளிநாடுகளுக்குச் செல்லும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு விமான எரிபொருளுக்கான கலால் வரியில் இருந்து ஒன்றிய அரசு விலக்கு அளித்துள்ளது. அதே சமயம், உள்நாட்டில் பறக்கும் விமானங்களுக்கு 11 சதவீத கலால் வரியை விமான நிறுவனங்கள் தொடர்ந்து செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கலால் வரி விலக்கு கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளுக்கு சேவை செய்யும் விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் செலவு குறையும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.