இலங்கையில் நிலவிவரும் கடும் பொருளாதார நெருக்கடியில், மக்கள் போராட்டத்தின் விளைவாக மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். ஆனாலும் இலங்கை இன்னும் அந்த அசாதாரண சூழலிலிருந்து மீண்டெழவில்லை.
நாளுக்கு நாள் மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வருகின்றனர். திடீரென அதிகரித்த உணவுப் பொருள்களின் விலையால் அத்தியாவசியத் தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
இந்த நிலையில், மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்ந்து வருகின்றனர். இதனால் பாஸ்போர்ட் வாங்குவதற்காக கொழும்புவில் உள்ள அலுவலகத்தில் தினந்தோறும் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக 26 வயது கர்ப்பிணி ஒருவர் தன் கணவருடன் கடந்த 2 நாள்களாக வரிசையில் காத்திருந்தார். அவருக்கு நேற்று காலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசவ வலியால் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றொரு நபர் மாரடைப்பால் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.