டேராடூன்: உத்தராகண்டில் ஆற்றில் கார் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர்.
உத்தராகண்ட் மாநிலம் மேற்கு இமயமலை அடிவாரத்தில் ஜிம் கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது. பஞ்சாப், டெல்லியை சேர்ந்த 11 பேர் இந்த பூங்காவுக்கு காரில் சுற்றுலா சென்றனர். தேசிய பூங்காவை சுற்றிப் பார்த்துவிட்டு அவர்கள் மீண்டும் பஞ்சாப் திரும்பினர்.
அவர்களின் கார் உத்தராகண்டின் நைனிடால் மாவட்டம், ராம்நகர் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது டெலா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை கார் கடந்தபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். ஒரு சிறுமி உட்பட 2 பேர் மட்டும் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நைனிடால் மாவட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.