நியூயார்க் : இந்தியாவில் ஊட்டச் சத்து குறைபாடு உள்ளோர் எண்ணிக்கை, 22.43 கோடியாக குறைந்துள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.
ஐ.நா., உணவு மற்றும் வேளாண் நிறுவனம், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச் சத்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2019 – 21ம் ஆண்டுகள் நிலவரப்படி, இந்தியாவில் போதிய ஊட்டச் சத்து உணவு கிடைக்காமல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, 2.30 கோடி குறைந்து, 22.43 கோடியாக சரிந்துள்ளது. இது, 2004 – 06ம் ஆண்டுகளில், 24.78 கோடியாக அதிகரித்து காணப்பட்டது.
கடந்த, 2020ல், ஊட்டச் சத்து குறைபாட்டால் வளர்ச்சி குன்றிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை, 3.61 கோடியாக குறைந்துள்ளது. இது, 2012ல், 5.23 கோடியாக அதிகரித்திருந்தது.
இதே காலத்தில் அதிக எடை உள்ள, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை, 30 லட்சத்தில் இருந்து, 22 லட்சமாக குறைந்துள்ளது. அதுபோல, இதே காலத்தில், 5 மாதங்கள் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள்,1.12 கோடியில் இருந்து, 1.40 கோடியாக அதிகரித்துள்ளனர்.
அதே சமயம் இந்தியாவில் தொந்தி பெருத்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2012ல், தொந்தி பெருத்தவர்கள் எண்ணிக்கை, 2.52 கோடியாக இருந்தது. இது, 2016ல், 3.43 கோடியாக உயர்ந்துள்ளது.இந்தியாவில், 15 – 49 வயதுள்ள பெண்கள் ரத்தச்சோகை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
கடந்த, 2012ல், ரத்த சோகையால் பாதித்த பெண்கள் எண்ணிக்கை, 17.15 கோடியாக இருந்தது. இது, 2019ல், 18.73 கோடியாக அதிகரித்துள்ளது.கடந்த, 2017ல், ஆரோக்கியமான உணவை பெற முடியாத நிலையில், 100 கோடி பேர் இருந்தனர். இது, 2019ல், 94.86 கோடியாக குறைந்துள்ளது. இந்தியாவில் நுகர்வோருக்கு நியாயமான விலையில் உணவுப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை தடுக்க, கோதுமை, பால் போன்றவற்றின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.வேளாண் பொருட்களை அரசு கொள்முதல் செய்து நியாய விலை கடைகள் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மானியம் வழங்குகிறது. இதுபோன்ற கொள்கைகளால் மக்களின் உணவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
கடந்த, 2021 நிலவரப்படி உலகளவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை, 230 கோடியாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்