புதுடெல்லி: தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் முன்னாள் மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே, தேசிய பங்குச் சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தலைவராக இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் பதவியில் இருந்தபோது பங்கு சந்தை தகவல்களை கசிய விட்டது தொடர்பான வழக்கில் கடந்த மார்ச் மாதம் சிபிஐ அவரை கைது செய்தது. இந்நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்இ முன்னாள் நிர்வாக இயக்குனர் ரவி நாராயண், முன்னாள் மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகியோர் மீது தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கை சிபிஐ நேற்று புதிதாக பதிவு செய்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை என்எஸ்இ ஊழியர்களின் தொலைபேசிகளை இவர்கள் ஒட்டுக் கேட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் சிபிஐ இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், ‘2009 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் என்எஸ்இ.யில் பணியாற்றிய ஊழியர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. சித்ரா ராமகிருஷ்ணா, ரவி நாராயண் கேட்டுக் கொண்டதற்கிணங்க சஞ்சய் பாண்டே ஒட்டுக் கேட்டுள்ளார்,’ எனத் தெரிவித்துள்ளது. முன்னாள் காவல் ஆணையரான சஞ்சய் பாண்டேவுக்கு சொந்தமான, ‘ஐசெக் செக்யூரிட்டிஸ்’ என்ற நிறுவனம்தான் தேசிய பங்கு சந்தை அலுவலகத்தில் பாதுகாப்பு தணிக்கைகளை மேற்கொண்டது.