பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டி காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருவது குறித்து அப்பகுதி திமுகவினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இது குறித்த விபரம் வருமாறு :
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகள் மற்றும் கூத்தைப்பார் பேரூராட்சி, துவாக்குடி நகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மேலே பச்சை நிற வண்ணத்தில் நடுவில் இளம் மஞ்சளில் கீழே பச்சை வண்ணத்தில் பளிச்சென்று இது நாள் வரை இருந்து வந்த நிலையில், தற்பொழுது மேலே காவி நிறத்திலும் மத்தியில் இளம் மஞ்சள் கீழே காவி நிறத்திலும் மாற்றப்பட்டு வருவது ஏன் என தெரியவில்லை என்கின்றனர் திமுகவினர் .
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு தற்பொழுது புதிய வர்ணம் அடிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
நேற்றைய தினம் கூத்தைபாரில் வசித்து வரும் முன்னாள் எம்எல்ஏ கேஎன் சேகரனின் பிறந்த நாள் விழாவிற்கு கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து அவரது வீட்டிற்கு நேரில் வந்து வாழ்த்தி சென்றனர்.
கூத்தைப்பார் பேரூராட்சியின் நுழைவு பகுதியில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு புதிய வர்ணம் பூசும் பணி நடைபெற்றதை பார்த்து அதிர்ச்சியுற்றனர் திமுக பிரமுகர்கள்.
பச்சை நிறத்தில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி காவி நிறத்தில் மாற்றப்படுவது ஏன் என தெரியாமல், முகம் சுளித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில் பச்சை வண்ணத்தில் மிகவும் பார்க்க அற்புதமாக இருந்ததை எதற்காக? காவி வண்ணத்திற்கு மாற்றுகிறார்கள், அதுவும் அமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு செயலா என்று புலம்பினர்.
ஆனால் காவி வண்ணத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மாற்றப்பட்டு வருவதை அவ்வழியே சென்று வந்த பாஜகவினர் கண்டு ரசித்து, மகிழ்ந்து திமுகவின் கோட்டையில் காவி குடிகொண்டு விட்டது எனச் சொல்லி ஆனந்தம் அடைகின்றனர்.
கலர் மாற்றம் குறித்து கூத்தைப்பார் பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் என்பவரிடம் கேட்டபோது அரசு உத்தரவுப்படி கலர் மாற்றம் செய்து வருகின்றோம் என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்