“எம்.பி பதவிக்கு தகுதியானவர் இளையராஜா..!" – கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேனி மாவட்ட 8-வது மாநாடு இன்று உத்தமபாளையத்தில் நடைபெற்றது. உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாவட்ட மாநாட்டில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு மாவட்டக் குழு மற்றும் மாநாட்டுக் குழுவினரைத் தேர்வு செய்தார்.

முத்தரசன்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், “நாட்டில் நடைபெறும் வகுப்புவாத கலவரங்கள் அபாயகரமானது. மத ரீதியாக மக்களை மோத வைத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேடுகின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்த லீனா மணிமேகலையின் `காளி’ நிகழ்த்துக்கலை ஆவணப்படத்துக்கு இந்தியாவில் பா.ஜ.க உட்பட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன. லீனா மணிமேகலை கைதுசெய்யப்பட வேண்டும் எனச் சொல்பவர்கள், ‌நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவை ஏன் கைதுசெய்யவில்லை?

இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவை பா.ஜ.க அரசு நிறுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. அதே வேளையில் தேனி மாவட்டம் உட்பட தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும், மேலும் தேனி மாவட்டம் உட்பட மலைப்பகுதிகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கான தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்.

லீனா மணிமேகலை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட வேண்டும். அணை பலமாக இருக்கிறது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை கேரள அரசும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

முல்லைப்பெரியாறு அணை

மேலும் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எப்போதும் தமிழகத்திற்காக குரல் கொடுக்கும் எனவும், திருப்பூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152அடியாக உயர்த்திட வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

தமிழ்நாட்டிலிருந்து நியமன எம்.பி பதவி அறிவிக்கப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷா ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வாழ்த்துகள். உண்மையிலேயே எம்.பி பதவிக்கு தகுதியானவர் இளையராஜா. ஆனால் அம்பேத்கருக்கு நேர் எதிரான மோடியை அவருடன் ஒப்பீட்டு இளையராஜா பேசியதால் தற்போது அவர் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். எம்.பி., பதவி கொடுத்து பா.ஜ.க மதவெறி அரசியலை செய்யக்கூடாது.

மோடி – இளையராஜா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு பா.ஜ.க கட்டுப்பாட்டில் அ.தி.மு.க இருப்பதால் ஆளும் கட்சியாக இருந்த போதும், தற்போது எதிர்கட்சியாக இருக்கும் போதும் அ.தி.மு.க-வினரால் சொந்த சிந்தனையில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதன் விளைவுதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் முன்னாள் அ.தி.மு.க அமைச்சரின் வீடுகளில் இன்றைக்கு நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை வரவேற்கத்தக்கது. இதில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் ஏதும் இல்லை. குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அ.தி.மு.க-வினர் நெருப்பில் குதித்து தன்னை நிரூபித்த சீதையை போல் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.