ஓவேலியில் மீண்டும் யானை தாக்கி தேயிலைத் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூர்: ஓவேலியில் கடந்த மே மாதம் இருவர் யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இன்று மீண்டும் தேயிலை தொழிலாளியை யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம்‌, கூடலூர்‌ சட்டப்பேரைவை தொகுதி, ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரூட்பாறை பகுதியில்‌ கடந்த மே மாதம் ஆனந்த்(43) என்பவரை யானை தாக்கி கொன்றது. மறுநாள், ஓவேலி கிராமம்‌ பாரம்‌ எஸ்டேட்‌ பகுதியில்‌ வசிக்கும்‌ மாலு(30) என்ற பெண்னை யானை தாக்கிக் கொன்றது.

தொடர்ந்து இரண்டு பேர் அடுத்தடுத்து நாட்களில்‌ யானையின்‌ தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும்‌ அச்ச உணர்வையும்‌, பீதியையும்‌ ஏற்படுத்தியது. ஓவேலியில் நடமாடும் யானையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். கூடலூர் வனக் கோட்டம், ஓவேலி வனச் சரகத்தில் மனித-விலங்குகளின் மோதல்களை குறைப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டிலிருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து வேட்டைத் தடுப்புக் காவலர்கள், கூடுதல் களப்பணியாளர்கள் சுமார் 50 பேர் பாதுகாப்புப் பணியிலும் 3 வாகனங்களுடன் அதிவிரைவு நடவடிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபடுட்டுள்ளனர். காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க ஆளில்லா விமானக் குழுக்களை அனுப்புதல், முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவுதல், காட்டு யானைகள் மனித குடியிருப்புக்குள் நுழையாத வகையில் புகை மற்றும் நெருப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உயிரிழந்த நாதன்

காட்டு யானைகளின் நடமாட்டத்தை இரவும் பகலும் தொடர்ந்து களக் குழுவுடன் உதவி வனப் பாதுகாவலர் மற்றும் வனச் சரக அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை ஓவேலி சப்பன்காடு என்ற பகுதியில் தேயிலை விவசாயம் செய்து வந்த ஆரூட்பாறை பகுதியைச் சேர்ந்த நாதன்(45) என்பவரை யானை தாக்கியதில், அவர் அப்பகுதியிலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவரது சடலத்தை மீட்டனர். பின்னர் ஓவேலியிலிருந்து உடலை ஊர்வலமாக கொண்டு வந்த மக்கள், சடலத்துடன் கூடலூர்-கள்ளிக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

”காட்டு யானைகளின் தொடர் தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருவதால், இப்பிரச்சினைக்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தினர். ”வனத்துறை அமைச்சர் நேரடியாக வந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், அது வரை போராட்டம் தொடரும்” என தெரிவித்தனர்.

காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரனிடம் கேட்ட போது, ”ஓவேலி பகுதியில் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணிக்க 50 வன ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதுமலையில் கும்கிகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளன. இந்நிலையில், எதிர்பாராதவிதமாக மீண்டும் அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.