கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ஆவினங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி சரண்யா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது), அதே பள்ளியில் படிக்கும் +2 மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மே 22-ம் தேதி அந்த +2 மாணவருக்கு பிறந்த நாள் என்பதால், அதை நண்பர்களுடன் கொண்டாடியிருக்கிறார். அப்போது மாணவி சரண்யாவுடன் இணைந்து புகைப்படம் எடுத்திருக்கிறார் அந்த +2 மாணவர். அதேபோல அந்த விழாவில் கலந்துகொண்ட 10-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களும் அதை புகைப்படமாக எடுத்திருக்கின்றனர்.
அதன்பின்னர், “இந்த போட்டோவையும், வீடியோவையும் உன் அப்பா, அம்மாவிடம் காட்டிவிடுவோம்” என்று மாணவியை அவ்வப்போது மிரட்டி வந்திருக்கின்றனர் 10-ம் வகுப்பு படிக்கும் அந்த 3 மாணவர்கள். இந்நிலையில்தான் ஜூலை 1-ம் தேதி பள்ளிக்கு வந்திருந்த மாணவியை மிரட்டி, ஒரு மாணவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்கு அந்த மாணவியை விட்டிற்குள் வைத்து பூட்டி, 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மூன்று மாணவர்களும் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அத்துடன் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, வெளியில் யாரிடமாவது சொன்னால் வீடியோவை வெளியில் விட்டுவிடுவோம் என்றும் மிரட்டியிருக்கின்றனர்.
அதனால் பயந்துபோன அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து அழுதுகொண்டே தனது தாயிடம் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து ஆவினங்குடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்ததன் அடிப்படையில், 10-ம் வகுப்பு படிக்கும் அந்த மூன்று மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கும் பரிந்துரைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியும், மாணவர்களும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சாதி மோதல் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.